என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தஞ்சாவூரில் நாளை தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை
- மாநாட்டுக்கு துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தலைமை தாங்குகிறார்.
- தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெற உள்ள தி.மு.க. மாநாடு என்பதால் அரசியல் அரங்கமே உற்றுநோக்கி கொண்டு இருக்கிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே 200 ஏக்கரில் மிக பிரமாண்டமாக "வெல்லும் தமிழ் பெண்கள்" என்ற தலைப்பில் தி.மு.க. டெல்டா மண்டல மகளிர் அணி மாநாடு நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
இதற்காக முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
அதன்படி ஏறத்தாழ 200 ஏக்கரில் இடம் தோ்வு செய்யப்பட்டு மாநாட்டில் பங்கேற்பவர்கள் அமர 100 ஏக்கரில் இருக்கைகள் அமைக்க இடம் ஒதுக்கப் பட்டு உள்ளது. மீதமுள்ள 100 ஏக்கரில் வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்த மாநாட்டில் தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, கடலூா், அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஒரு பூத்துக்கு 10 போ் வீதம் 12 ஆயிரத்து 500 பூத்துகளில் இருந்து மொத்தம் 1¼ லட்சம் போ் சீருடையில் கலந்து கொள்ள உள்ளனா். மொத்தத்தில் ஏறத்தாழ 1½லட்சம் போ் பங்கேற்பார்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
மாநாட்டுக்கு துணைப் பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தலைமை தாங்குகிறார்.
தி.மு.க. முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என். நேரு முன்னிலை வகிக்கிறார்.
இந்த மாநாட்டுக்காக பிரம்மாண்டமான மேடை, அரங்கம், இருக்கைகள், மின் விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு நடைபெற உள்ள தி.மு.க. மாநாடு என்பதால் அரசியல் அரங்கமே உற்றுநோக்கி கொண்டு இருக்கிறது. மேலும் மாநாட்டு திடலில் வாழை மரங்கள், கரும்புகளால் அலங்கரிக்கும் பணி நடைபெற உள்ளன. இதற்காக வாழை மரங்கள், கரும்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
முதலமைச்சர் வருகையையொட்டி, தஞ்சாவூா் மாவட்டத்தில் பாதுகாப்பு காரணம் கருதி ஜனவரி 26-ந் தேதி முதல் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) தியாகராஜன் தெரிவித்து உள்ளாா்.
மேலும் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதேபோல, மீண்டும் ஜனவரி 28-ந் தேதி தஞ்சாவூா் மாவட்டத்துக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கும்பகோணம் அருகே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சாா்பில் நடைபெற உள்ள மஹல்லா மாநாட்டில் கலந்து கொள்கிறாா்.
இதையொட்டி ஜனவரி 28-ந் தேதி காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை டிரோன்கள் பறக்க மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ளது. மாநாடு நடக்கும் பகுதியின் எதிர்புறத்தில் மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இங்குதான் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தனது ஆதரவாளர்களுடன் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு விமானத்தில் வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலை மார்க்கமாக தஞ்சைக்கு வந்து மதியம் 1 மணிக்கு வைத்திலிங்கம் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதையடுத்து அவர் அப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மதிய உணவு சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்கிறார். பின்னர் அவர் மாலை 5 மணிக்கு மாநாட்டு மேடைக்கு வருகிறார். அதைத்தொடர்ந்து மாநாடு முடிந்து இரவு 7.30 மணிக்கு புறப்படுகிறார்.






