என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வட தமிழகத்தை நோக்கி புயல் சின்னம் நகர்கிறது- 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
- ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவா்கள் கரை திரும்ப வேண்டும்.
- வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் வட மாவட்டங்களில் தீவிரமாகி உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்த நிலையில், 16, 17, 18 ஆகிய 3 நாள்களுக்கும் பரவலாக பலத்த மழை பெய்தது.
மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்துக்கு நேரில் சென்று மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி மூலம் ஆய்வு செய்தார்.
அப்போது, ஆயத்த நிலை மற்றும் மீட்புப் பணிகளை விரைவுபடுத்தவும், கரையோரங்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லவும் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக முகாம்களைத் தயார் நிலையில் வைத்திருக்கவும், முகாம்களில் மக்களுக்கு வழங்க வேண்டிய உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே மன்னாா் வளைகுடா மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவியது. மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வந்தது.
இதன் காரணமாக, இன்று (செவ்வாய்கிழமை) தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இது இன்று காலை 8.30 மணி நிலவரப்படி தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து நாளை (22-ந்தேதி) பிற்பகலில் ஆந்திர கடற்கரைகளுக்கு அப்பால் தென்மேற்கு மற்றும் மேற்கு மத்திய வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். அதன்பிறகு அது மேற்கு வடமேற்காக வடக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக 8 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும். விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது. அங்கு ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
வருகிற 25-ந்தேதி வரை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
இதனால் இன்று ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவா்கள் கரை திரும்ப வேண்டும்.
வீடுகளில் உள்ள மின்சாதன பொருள்களை பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, இடி, மின்னல் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும். அந்த நேரங்களில், கைப்பேசியைப் பயன்படுத்துவதையும் முற்றிலும் தவிா்க்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (புதன்கிழமை) அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்கள், புதுவை பகுதிகளிலும் கன முதல் மித கனமழையும், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் வட மாவட்டங்களில் தீவிரமாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தில் அதிகபட்சமாக 17 செ.மீ. மழை பெய்துள்ளது.






