என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருப்பூர் நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.7½ லட்சம் மோசடி- சைபர் கிரைம் போலீசார் விசாரணை
- தங்கராஜ் பிரபல வங்கியில், வங்கிக்கணக்கு வைத்துள்ளார்.
- வங்கி பெயரில் வரும் எந்தவிதமான செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் தங்கராஜ். தனியார் நிதி நிறுவன உரிமையாளர். இவர் பிரபல வங்கியில், வங்கிக்கணக்கு வைத்துள்ளார். அவருக்கு அடையாளம் தெரியாத செல்போன் எண்ணில் இருந்து, வங்கி கணக்கு வைத்துள்ள வங்கியின் லோகோ பெயர் உள்ளிட்டவையுடன் வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி வந்துள்ளது.
அதில், உங்களது வங்கி கணக்கு கே.ஒய்.சி. அப்டேட் செய்ய வேண்டும். இன்று கடைசிநாள். அப்டேட் செய்யவில்லை என்றால் உங்கள் வங்கி கணக்கு பிளாக் செய்யப்படும். உடனடியாக கே.ஒய்.சி. அப்டேட் செய்யுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து வங்கியில் இருந்து தான் குறுஞ்செய்தி வந்துள்ளது என நம்பி தங்கராஜ், வாட்ஸ்அப்பில் வந்த செயலியை தனது செல்போனில் பதிவிறக்கம் செய்து அதில் தனது பெயர், பிறந்த தேதியை பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் அவருடைய வங்கிக்கணக்கில் இருந்து 4 பரிவர்த்தனைகளில் ரூ.7 லட்சத்து 47 ஆயிரத்து 799 எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரை பெற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, பொதுமக்கள் யாரும் வங்கியின் பெயரில் வாட்ஸ்அப் அல்லது வேறு வகையில் ரிவார்ட் பாயிண்ட் செய்ய கடைசி நாள் என்றோ அல்லது வங்கி கணக்கு கே.ஒய்.சி. விவரங்களை அப்டேட் செய்ய சொல்லியோ வரும் செயலிகளை பதிவிறக்கம் செய்தால் உங்களது வங்கிக்கணக்கில் உங்கள் அனுமதியில்லாமல் மோசடி நபர்களால் பணம் எடுக்கப்படும். எனவே வங்கி பெயரில் வரும் எந்தவிதமான செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.






