என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கேட் கீப்பரின் அலட்சியமே விபத்துக்கு காரணம் - விசாரணையில் உறுதி
- பங்கஜ் சர்மாவை வருகிற 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
- ரெயில் விபத்து தொடர்பாக 13 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.
கடலூர்:
கடலூர் அருகே உள்ள செம்மங்குப்பம் ரெயில்வே கேட்டில் விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை சென்ற பயணிகள் ரெயில் பள்ளி வேன் மீது மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பலியானார்கள். 3 பேர் படுகாயத்துடன் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்துக்கு ரெயில்வே கேட் கீப்பர் தான் காரணம் என கருதி அவரை பொதுமக்கள் தாக்கினார்கள். இதில் அவர் படுகாயம் அடைந்தார். அவரை போலீசார் மீட்டனர். இந்த ரெயில்வே கேட் கீப்பர் பங்கஜ் குமாரை சிதம்பரம் ரெயில்வே போலீசார் கைது செய்தனர். அவரை வருகிற 22-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து, ரெயில் மோதி 3 பேர் பலியான சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 அதிகாரிகள் கொண்ட குழு நியமித்து தென்னக ரெயில்வே உத்தரவிட்டது. அக்குழுவினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். ரெயில் விபத்து தொடர்பாக 13 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்றது.
இந்த நிலையில், ரெயில் விபத்துக்கு ரெயில்வே கேட்டை மூடாமலேயே மூடிவிட்டதாக பிரைவேட் எண்ணை ஆலப்பாக்கம் நிலைய மாஸ்டருக்கு கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கொடுத்துள்ளார். இதையடுத்து விபத்து நடைபெற்ற பிறகு, ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்து கேட்டை மூடவில்லை என்று பங்கஜ் சர்மா ஒப்புக்கொண்டது ரெயில்வேயின் தானியங்கி வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவாகி உள்ளது.
இதனை தொடர்ந்து பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்துக்கு கேட் கீப்பர் பங்கஜ் சர்மாவின் அலட்சியமே காரணம் என்பது உறுதியாகி உள்ளது.
இதனிடையே, விபத்து நடைபெற்ற அன்றே, கேட்டை மூடும் போது வேன் ஓட்டுநர் கேட்டை திறக்கச்சொன்னதாக முதல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






