என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடலூரில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி 3 மாணவர்கள் பலி: 11 பேரிடம் திருச்சியில் சிறப்புக்குழுவினர் விசாரணை
- 13 நபர்களை விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
- விபத்து நடந்த போது நிகழ்ந்த தகவல் பரிமாற்றம் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு எழுத்துப்பூர்வமாக பதில் வாங்கிக் கொண்டதாக தெரிகிறது.
திருச்சி:
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டில் பள்ளி வேன் மீது விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரெயில் மோதியது. இந்த கோர விபத்தில் மாணவி சாருமதி (16), மாணவர்கள் விமலேஷ் (10), செழியன் (15) ஆகிய 3 பேர் பலியாகினர்.
கேட் கீப்பர் மது அருந்தியிருந்ததாகவும், கேட்டை மூட மறந்துவிட்டு தூங்கியதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மேலும், கேட் கீப்பர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், அவருக்கு மொழி புரியாததால் ஏற்பட்ட கவனக்குறைவாலேயே இந்த விபத்து நேரிட்டதாகவும் அந்தப் பகுதி மக்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து கேட் கீப்பரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பங்கஜ் சர்மா மீது கொலை வழக்கு, மரணத்திற்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 5 வழக்குகள் பதியப்பட்டு, கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த புதிய கேட் கீப்பர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த விசாரணைக் குழு விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் திடீர் திருப்பமாக பழைய விசாரணைக் குழு கலைக்கப்பட்டது. இதை தொடர்ந்து திருச்சி ரெயில்வே கோட்ட பாதுகாப்பு அதிகாரி மகேஷ் குமார் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் நேற்று முதல் தங்களது விசாரணையை தொடங்கினர். சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டனர்.
இதனிடையே விபத்து நடந்த இடத்தில் பணியில் இருந்த கேட் கீப்பர், லோகோ பைலட், கடலூர், ஆலம்பாக்கம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பணியாற்றி வரும் முதுநிலை உதவி லோகோ பைலட், ரெயில் நிலைய மேலாளர், ஆலம்பாக்கம் ரெயில் நிலைய 2 மேலாளர்கள், கடலூர் ரெயில் நிலைய மேலாளர், கடலூர் இருப்பு பாதை பகுதி பொறியாளர்கள் 2 பேர், ரெயில் போக்குவரத்து ஆய்வாளர், திருச்சி, கடலூர் பகுதியை சேர்ந்த ஒரு முதன்மை லோகோ ஆய்வாளர், விபத்துக்குள்ளான பள்ளி வாகன ஓட்டுநர் என 13 நபர்களை விசாரணைக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது.
விபத்தில் நேரடியாக தொடர்புடைய கேட் கீப்பர் சிறையிலும், பள்ளி வேன் ஓட்டுநர் மருத்துவமனையிலும் உள்ளனர். ஆகவே மீதமுள்ள 11 பேரிடம் இன்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில் விசாரணை நடந்தது.
இவர்களிடம் தென்னக ரயில்வே தலைமையகம் சார்பில், முதன்மை தலைமை பாதுகாப்பு அதிகாரி கணேஷ் தலைமையில், மூன்று பேர் கொண்ட விசாரணை குழு விசாரணை நடத்தி வருகிறது. ஒவ்வொருவரிடமும் தனித்தனியாக குழுவினர் விசாரணை நடத்தினர்.
விபத்து நடந்த போது நிகழ்ந்த தகவல் பரிமாற்றம் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு எழுத்துப்பூர்வமாக பதில் வாங்கிக் கொண்டதாக தெரிகிறது. காலையில் 5 பேர் ஆஜராகி இருந்தனர். மீதமுள்ள 6 பேரும் இன்று மாலைக்குள் ஆஜராவார்கள் எனவும், ரெயில்வே துறை சார்ந்தவர்கள் மீது தவறுகள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரெயில்வே வட்டாரங்கள் தெரிவித்தனர்.






