என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

'குற்றங்கள் அதிகரிக்கவில்லை, புகாரளிக்கும் துணிச்சல் மக்களிடத்தில் வந்துள்ளது' - டிஜிபி வெங்கட்ராமன்
- காவல்துறை அளித்த விழிப்புணர்வால்தான் மக்கள் புகாரளிக்க முன்வந்துள்ளனர்.
- புள்ளிவிவரத்திற்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் வன்முறைகள் போன்ற குற்றங்கள் அதிகரித்த வண்ணமே உள்ளன. அரசின் மெத்தனமான செயல்பாடே இதற்கு காரணம் என பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இன்று தமிழ்நாடு தலைமை செயலாளர், டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய டிஜிபி வெங்கட்ராமன்,
"சிறியக் குற்றமோ, பெரியக் குற்றமோ குற்றத்தை பதிவு செய்யவே மக்களை வலியுறுத்துகிறோம். போக்சோ சட்டம் பத்து ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவந்ததுதான். முன்பு இச்சட்டம் தொடர்பான விழிப்புணர்வு மக்களிடையே இல்லை. இப்போது காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, சமூக நலத்துறை சார்பில் பல இடங்களுக்கும் சென்று விழிப்புணர்வு அளிக்கிறோம். அதன் காரணமாக பாதிக்கப்படுவோர் துணிந்து புகாரளிக்க முன்வந்துள்ளனர். இதனால் போக்சோவில் அதிக வழக்குகள் பதிவாகியுள்ளன.
அதுபோல எஸ்சி, எஸ்டி வன்கொடுமை சட்டங்கள் தொடர்பாகவும் விழிப்புணர்வு அளித்துள்ளோம். ஒருவரை அடிக்க வேண்டாம், சாதி பெயரை சொன்னாலே இப்போது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. இதனால் தற்போது நிறைய புகார்கள் வருகிறது. எந்தப் புகாராக இருந்தாலும், மனுவாக இல்லாமல், வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறோம். அதனால்தான் நிறைய வழக்குகள் பதிவாகிறது.
இதனை ஒரு குற்றம்போலக்கூறி சமூகத்தை தவறான பார்வையில் பார்க்கத் தொடங்கினால், மக்கள் முன்வந்து புகாரளிக்க தயக்கம் காட்டுவார்கள். புள்ளிவிவரத்திற்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. அது முக்கியம்தான். ஆனால் அதன் வழியாகவே புகார்களை குறைக்க வழிவகுக்கக்கூடாது.
விளாத்திக்குளம் வழக்கில் உடனடி நடவடிக்கை இல்லை என்றுதான் ரேஞ்ச் டிஐஜி, சம்பந்தப்பட்ட அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்களையும் பணியிடை நீக்கம் செய்துள்ளோம். அவர்கள் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்குநேரி விவகாரத்தில் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். எந்த சமூகமாக இருந்தாலும் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். சாதிய கொலைகள் 2021-ல் இருந்து பார்க்கும்போது குறைந்துள்ளது. ஒவ்வொரு கொலைக்கும் ஒரு காரணம் உள்ளது.
இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டு ரவுடிசத்தை பெருமைபேசும் சரித்திர குற்றவாளிகள் தொடர்பான கேள்விக்கு,
அவர்கள்மீது நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. அதை நீங்களும் ஊக்குவிக்காமல் இருந்தால் நல்லது. இந்த விவகாரத்தில் ஊடகங்களும் ஒத்துழைக்க வேண்டும்." என தெரிவித்தார்.






