என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் - அரசு தரப்பு கோரிக்கை
- குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட அனைத்து பிரிவுகளிலும் ஞானசேகரன் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
- குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று ஞானசேகரன் கோரிக்கை விடுத்தார்.
சென்னை:
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை ஞானசேகரன் என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்த ஞானசேகரனை கைது செய்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னையில் உள்ள மகளிர் கோர்ட்டில் மார்ச் மாதம் முதல் விசாரணை நடந்து வந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி உள்பட 29 பேர் சாட்சியம் அளித்தனர். 75 சான்று ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி ராஜலட்சுமி இன்று பிறப்பித்தார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று அதிரடி தீர்ப்பு அளித்தார். குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட அனைத்து பிரிவுகளிலும் ஞானசேகரன் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
ஞானசேகரன் தொடர் குற்றவாளி, அவருக்கு கருணை காட்டக்கூடாது. அவர் மீது 35-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அம்மாவையும் சகோதரியையும் பார்த்துக்கொள்ள வேண்டும். குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும். முடக்கப்பட்ட வங்கி கணக்குகளை விடுவிக்க வேண்டும் என்று ஞானசேகரன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குற்றவாளி ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் ஜூன் 2-ந்தேதி வழங்கப்படும் என்று நீதிபதி ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.
வரும் 2-ந்தேதி வரை ஞானசேகரனின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.






