என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஓராண்டாகியும் துப்பு துலங்கவில்லை: காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் அவிழாத மர்ம முடிச்சுகள்
- சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரிகள் நெல்லையில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர்.
- ஜெயக்குமார் கடிதத்தில் எழுதியிருந்த அனைவரையும் போலீசார் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைச்சுத்துபுதூரை சேர்ந்தவர் கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங்(வயது 60).
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த இவர் கடந்த ஆண்டு மே மாதம் 2-ந்தேதி இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் 4-ந்தேதி வீட்டின் பின்புறம் உடலில் இரும்பு கம்பிகளால் கட்டப்பட்டு எரிக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.
தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் தலைவர் கொலை வழக்கில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் தலைமையில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்த கொலையில் அவர் எழுதியதாக போலீஸ் நிலையத்தில் அவரது மகன் ஒப்படைத்த கடிதத்தில் வள்ளியூர், திசையன்விளை பகுதிகளை சேர்ந்த தொழிலதிபர்கள், நண்பர்கள், முக்கிய அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், தனக்கு பணம் தரவேண்டியவர்கள், பணம் கொடுக்க வேண்டியவர்கள் என ஏராளமான நபர்களின் பெயர்களை எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில் எழுதியிருந்த அனைவரையும் போலீசார் தனித்தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். சம்பவ இடத்திலும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்தும் தடயம் ஏதும் கிடைக்கவில்லை. இதனால் அறிவியல் பூர்வ விசாரணையும் மேற்கொண்டனர். ஆனால் எவ்வித துப்பும் கிடைக்கவில்லை. இதனிடையே அவரது பிரேத பரிசோதனை அறிக்கையின் முடிவிலும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என்பதை கூட தீர்மானிக்க முடியவில்லை.
இதனால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றினர். தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரிகள் நெல்லையில் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். தென் மாவட்டங்களை சேர்ந்த அனைத்து அதிகாரிகளும் வந்து விசாரணை மேற்கொண்டனர். ஆனாலும் நாளையோடு ஓராண்டு முடிவடையும் நிலையில் இன்னும் ஜெயக்குமார் கொலை வழக்கு ஆரம்ப நிலையிலேயே இருந்து வருகிறது. எவ்வித துப்பும் துலங்கவில்லை. அவரது மரணம் குறித்து விசாரிப்பதில் போலீசார் காட்டும் ஆர்வத்தை கூட அவரது குடும்பத்தினரோ, அரசியல் கட்சியினரோ காட்டவில்லை. இதனால் கொலைவழக்கின் மர்ம முடிச்சுகள் அவிழாமல் நீர்த்து போய் இருக்கிறது.