என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் வருகை - மதுரையில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க தடை
- இன்று மாலை நடைபெறும் ரோடுஷோ நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார்.
- தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை:
தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று விமானம் மூலம் மதுரை வருகிறார். அவர் இன்றும், நாளையும் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அவர் செல்லும் வழியில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என்று மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது
இன்று மாலை நடைபெறும் ரோடுஷோ நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொள்கிறார். இதற்காக அவனியாபுரம் வெள்ளக்கல், ஜெயவிலாஸ் சந்திப்பு, ஜீவா நகர் சந்திப்பு, டி.வி.எஸ். பள்ளி பாலம், சுப்பிரமணியபுரம் ரவுண்டானா, காளவாசல், குரு தியேட்டர், ஏ.ஏ.ரோடு, புதுஜெயில் ரோடு, மேயர் முத்து சிலை, சிம்மக்கல் வழியாக அரசு சுற்றுலா மாளிகைக்கு செல்கிறார்.
அங்கிருந்து நாளை (1-ந் தேதி) காலை பொதுக்குழு கூட்டத்திற்கு செல்வதற்காக சுற்றுலா மாளிகையில் இருந்து புறப்பட்டு, ஐ.டி.ஐ., புதூர் பஸ் நிலையம், மூன்றுமாவடி, சர்வேயர் காலனி சந்திப்பு, 120 அடி ரோடு, மீனாட்சி மிஷன் சந்திப்பு, உத்தங்குடி பஸ் நிலையம் ஆகிய பகுதி வழியாக முதலமைச்சர் செல்லும் வழிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






