திருமா சிற்றன்னை மறைவு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கத் தொலைபேசியில் அழைத்தபோது, தனது சிற்றன்னையின் மறைவு குறித்துத் தெரிவித்தார்.அன்புச் சகோதரர் அவர்களுக்கும் - அவரது குடும்பத்தினருக்கும் - உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திருமா சிற்றன்னை மறைவு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
Published on

சென்னை :

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவனின் சிற்றன்னை உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இதுதொடர்பாக தொல்.திருமாவளவன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

எனது சிற்றன்னை செல்லம்மாள் (78)அவர்கள் சற்றுமுன் இயற்கை எய்தினார்.

கடந்த ஆக 07 அன்று மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு சுயநினைவு இழந்த நிலையில் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மிகுந்த கவனத்தோடு மருத்துவர்கள் தீவிர கண்காணிப்புடன் சிகிச்சை அளித்தனர். எனினும், பலனின்றி தற்போது காலமானார் என்பது பெருந்துயரமளிக்கிறது.

பள்ளிப் பருவத்தில் எனக்கு ஆடை உடுத்தி, தலையில் எண்ணெய்த் தடவி இரட்டை சடைபின்னிவிட்டுப் பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாய்! தந்தை என்னைக் கண்டிக்கும் போதெல்லாம் எனக்காக வாதாடிய தாய்! வீட்டில் மூத்த மகன் என்பதால் 'பெரியதம்பி, பெரியதம்பி' என்று என்னைச் செல்லமாக அழைத்த தாய்! நான் பட்டவகுப்பை முடித்த காலத்திலிருந்து, 'படித்தது போதும் கல்யாணம் பண்ணு பா' என அறிவுறுத்திய தாய்! பத்தாண்டுகளுக்கு முன்னரே பக்கவாதத்தால் உடல் நலிவுற்று நினைவு தடுமாறி வீட்டிலேயே முடங்கிய நிலையிலும் எப்போதாவது நான் ஊருக்குச் செல்லும்போது, என் குரல் கேட்டதும் 'தம்பீ தம்பீ' என்று ஓடிவந்து என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு அன்பைப் பொழிந்த தாய்! இன்று எம்மோடு இல்லை என்பது வாழ்வே வெறுமையாய் உள்ளது. துக்கத்தால் மனம் கனக்கிறது.

அப்பா(2010), அக்கா(2020), சின்னம்மா (2025)என அடுத்தடுத்து இழப்புகளை எதிர்கொள்ளும் அவலம். துயரங்களைத் தாங்கும் நிலை.

அம்மாவுக்கு எனது வீரவணக்கம்! என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்க்ததில் வெளியிட்டுள்ள பதிவில்,

அன்புச் சகோதரர் - எழுச்சித் தமிழர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கத் தொலைபேசியில் அழைத்தபோது, தனது சிற்றன்னையின் மறைவு குறித்துத் தெரிவித்தார்.

சிற்றன்னையின் மீதான அவரது பாசப்பிணைப்பையும் - அவரது மறைவு ஏற்படுத்தியிருக்கும் வேதனையையும் - உள்ளத்தில் நிறைந்திருந்த சோகத்தையும் உணர்ந்து கண்கள் கலங்கினேன். அன்புச் சகோதரர் அவர்களுக்கும் - அவரது குடும்பத்தினருக்கும் - உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com