என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விஜய் பிறந்தநாளை கொண்டாடுவதில் மோதல்: கத்தியுடன் சுற்றும் த.வெ.க. நிர்வாகியின் வீடியோ வைரல்
- விஜய் பிறந்தநாளை கொண்டாடுவதில் இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
- படுகாயம் அடைந்த 6 பேர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய் பிறந்தநாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி நகரத்தின் பல்வேறு பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மாலையில் கீழ்புதூர் பகுதியில் தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் 2 கார்களில் பிறந்தநாள் கொண்டாட கீழ் புதூர் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்பொழுது அந்தப்பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் கொடியேற்றி மரக்கன்றுகள் நடமுற்பட்டுள்ளனர்.
அப்பொழுது அந்த பகுதியை சேர்ந்த கிளை தலைவரான விஜய் என்கின்ற நாகராஜ் இது என்னுடைய ஏரியா இங்கு எனக்கு தகவல் தெரிவிக்காமல் எப்படி வந்து நிகழ்ச்சிகள் நடத்துகிறீர்கள், என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்பொழுது புதிய பாஞ்சாலியூர் பகுதியை சேர்ந்த தபு என்கின்ற தப்ரீஸ் கையில் கத்தியுடன் அவரது நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டோருடன் அங்கு சென்று விஜய் என்கின்ற நாகராஜ் தரப்பினரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்பொழுது தபு என்கின்ற தப்ரீஷ் கத்தியை எடுத்து சுற்றி நின்றிருந்த விஜய் என்கின்ற நாகராஜ் தரப்பினர் மீது தாக்கியதில் அதே பகுதி சேர்ந்த பார்த்திபன், முருகேசன், சூர்யா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர் அவர்களை திருப்பி தாக்கியதில் அங்கு வந்த ராஜாஜி நகர் பகுதியை சேர்ந்த அருண், ஹரிராம், பாரதியார் நகர் பகுதியை சேர்ந்த சஞ்சய் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்த 6 பேரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இரு தரப்பினருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர்கள் வந்த காரை அங்கேயே விட்டுச் சென்றதால் அந்த பகுதி மக்கள் காரின் முன் பக்கம் மற்றும் பின் பக்க கண்ணாடிகளை உடைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசார் தரப்பினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






