என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் கட்டாயம்  - மீறினால் ரூ.3000 வரை அபராதம் : மாநகராட்சி முடிவு
    X

    வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' கட்டாயம் - மீறினால் ரூ.3000 வரை அபராதம் : மாநகராட்சி முடிவு

    • தற்போது வரை 11 ஆயிரம் தெரு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்தி அதை கண்காணித்து வருகிறோம்.
    • 2 லட்சம் 'மைக்ரோ சிப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன.

    சென்னை:

    சென்னையில் வளர்ப்பு நாய் மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது.

    இதில் பிட் புல், ராட்வீலர், ஜெர்மன் ஷெப்பர்ட் உள்ளிட்ட நாய் இனங்களால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, நாய் வளர்ப்பவர்கள் சாலையில் அழைத்துச் செல்லும்போது நாய்களுக்கு வாய்மூடி கட்டாயம் அணிவிக்க வேண்டும்,

    ரேபிஸ் நோய் தடுப்பூசி செலுத்த வேண்டும், கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும், வளர்ப்பு நாய்கள் கடித்தால் அதன் உரிமையாளர்களே பொறுப்பு ஆகிய கட்டுப்பாடுகளை விதித்தது. மாநகராட்சியின் இந்த உத்தரவுகளை பெரும்பாலான நாய் வளர்ப்பவர்கள் பின்பற்றவில்லை.

    இதேபோல, பராமரிக்க முடியவில்லை என்றால் வளர்ப்பு நாய்களை அதன் உரிமையாளர்கள் சாலைகளில் விட்டு செல்லும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. எனவே, இதற்கு தீர்வு காணும் வகையில் வளர்ப்பு நாய்களின் உடலில் 'மைக்ரோ சிப்' பொருத்த மாநகராட்சி முடிவு செய்தது. இதுகுறித்து கடந்த ஜனவரி மாதம் நடந்த மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, சிப் கொள்முதல் மற்றும் அதற்கான செயலி உருவாக்கத்திற்கு மாநகராட்சி டெண்டர் கோரியது. தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில் அடுத்த மாதம் முதல் வளர்ப்பு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்துவது கட்டாயமாகிறது.

    இதுகுறித்து, மாநகராட்சி கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னையில் உள்ள 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதிக்குள் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது வரை 11 ஆயிரம் தெரு நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்தி அதை கண்காணித்து வருகிறோம். இதேபோல, சென்னையில் 12,500 பேர் தங்களின் வளர்ப்பு பிராணிகளுக்கு உரிமம் பெற்றுள்ளனர். மீதம் உள்ள நபர்கள் உரிமம் பெற பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் சென்னையில் வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்கள் தங்களின் நாய்களுக்கு 'மைக்ரோ சிப்' பொருத்துவது கட்டாயம்.

    இதற்காக 2 லட்சம் 'மைக்ரோ சிப்'கள் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளன. தனியார் மற்றும் அரசு கால்நடை ஆஸ்பத்திரிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வழங்கப்பட உள்ளது. வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வரும் போது 'மைக்ரோ சிப்' பொருத்தவில்லை என்றால் கட்டாயம் பொருத்திக்கொள்ள அறிவுறுத்தப்படும். அவ்வாறு பொறுத்தாத நாயின் உரிமையாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். 'மைக்ரோ சிப்' பொருத்தப்படும் நாய்கள் அதற்கான செயலி மூலம் கண்காணிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×