என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கூட்டணியில் 50 தொகுதி கேட்கும் பா.ஜ.க. - சென்னையில் மட்டும் 8 தொகுதிகள் கேட்பதால் அ.தி.மு.க. அதிர்ச்சி
- 26 பாராளுமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலின்போது பா.ஜ.க. குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று உள்ளது.
- அ.தி.மு.க.விடம் இருந்து 70 தொகுதிகளை கேட்டு பெற்று 50 இடங்களில் களம் இறங்க பா.ஜ.க. முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது.
சென்னை:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க. தமிழகத்தில் தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் விவரங்களை பட்டியலிட்டு வைத்து உள்ளது. இந்த பட்டியல் தமிழகத்தில் அமித்ஷா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அ.தி.மு.க. தலைமையிடம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
26 பாராளுமன்ற தொகுதிகளில் கடந்த தேர்தலின்போது பா.ஜ.க. குறிப்பிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்று உள்ளது. அந்த தொகுதிகளில் 20 முதல் 40 சதவீதம் வரையில் பா.ஜ.க. கட்சிக்கு வாக்குகள் கிடைத்து உள்ளன.
அதனை மையமாக வைத்தே சென்னை முதல் குமரி வரை 50 சட்டமன்ற தொகுதிகளை பா.ஜ.க. கட்சி அடையாளம் கண்டுள்ளது. அது தொடர்பான விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சோளிங்கர், மத்திய சென்னையில் எழும்பூர், துறைமுகம், ஆயிரம்விளக்கு, வடசென்னையில் கொளத்தூர், தென்சென்னையில் மயிலாப்பூர், தி.நகர், வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகள் முதன்மையானவையாக இடம் பெற்றுள்ளன.
கோவை பாராளுமன்ற தொகுதியில் கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டன்பாளையம், பல்லடம், சிங்காநல்லூர், சூலூர், தர்மபுரி தொகுதியில் பாலக்கோடு, திண்டுக்கல்லில் ஒட்டன்சத்திரம், ஈரோட்டில் பவானி, கள்ளக்குறிச்சியில் சங்கராபுரம், கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் குளச்சல், கன்னியாகுமரி, கிள்ளியூர், நாகர்கோவில், பத்மநாபபுரம், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளும் இதில் அடங்கி உள்ளன.
கரூரில் குளித்தலை, கிருஷ்ணகிரியில் ஓசூர், தளி, மதுரையில் மதுரை தெற்கு, நாமக்கல்லில் ராசிபுரம், நீலகிரியில் குன்னூர், மேட்டுப்பாளையம், ஊட்டி சட்டமன்ற தொகுதிகளும் பெரம்பலூர் தொகுதியில் பெரம்பலூர், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் கிணத்துகடவு, தொண்டா முத்தூர், வால்பாறை, ராமநாதபுரம் தொகுதியில் பரமக்குடி, தென்காசி எம்.பி. தொகுதியில் தென்காசி, தேனி பாராளுமன்ற தொகுதியில் போடி, தூத்துக்குடி தொகுதிக்குட்பட்ட ஒட்டபிடாரம், திருச்சி தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளும் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் ஆலங்குளம், அம்பை, நாங்குநேரி, பாளையங்கோட்டை, ராதாபுரம், வேலூரில் ஆம்பூர், அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம், வேலூர், விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அருப்புக்கோட்டை ஆகிய தொகுதிகளும் இடம் பெற்றுள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
இது தவிர கடந்த பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகள் 13 தொகுதிகளிலும் கூடுதல் வாக்குகளை பெற்று இருப்பதாகவும் அது தொடர்பான பட்டியலை தனியாகவும் பா.ஜ.க. கட்சி தயாரித்து வைத்துள்ளது.
மொத்தமாக அ.தி.மு.க.விடம் இருந்து 70 தொகுதிகளை கேட்டு பெற்று 50 இடங்களில் களம் இறங்க பா.ஜ.க. முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. மீதம் உள்ள 20 தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுப்பதற்கும் அந்த கட்சி முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படி 50 தொகுதிகளில் களம் இறங்கும் பா.ஜ.க. கட்சி நிச்சயம் 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற அமித்ஷா வியூகம் வகுத்து இருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.
வருகிற 15-ந்தேதி முதல் அ.தி.மு.க.வினர் விருப்ப மனுக்களை வாங்கி பூர்த்தி செய்து தலைமை அலுவலகத்தில் அளிக்கலாம் என்று அ.தி.மு.க. அறிவித்துள்ள நிலையில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட விரும்பும் தொகுதிகள் பட்டியல் வெளியாகி இருப்பது அ.தி.மு.க.வை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.






