என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    முப்படைகளுக்கும் அரசு முழு சுதந்திரம் அளித்தது- ராணுவ தளபதி உபேந்திர திவேதி
    X

    முப்படைகளுக்கும் அரசு முழு சுதந்திரம் அளித்தது- ராணுவ தளபதி உபேந்திர திவேதி

    • முப்படை தளபதிகளும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தோம்.
    • உரி மற்றும் பாலகோட் போன்ற முந்தைய பதிலடி தாக்குதலில் இருந்து ஆபரேஷன் சிந்தூர் வேறுபட்டது.

    சென்னை:

    காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா அதிரடி நடவடிக்கை எடுத்தது.

    பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத் தப்பட்டு அழிக்கப்பட்டன. இதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் ராணுவங்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த சண்டை 4 நாட்கள் நடந்தது. இதில் பாகிஸ்தானின் ராணுவ கட்டமைப்புகளை இந்தியா தாக்கி அழித்தது.

    இதற்கிடையே ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று இந்திய விமானப்படை தளபதி அமர்பிரித் சிங் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.

    இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி முதல் முறையாக பேசினார். ஐ.ஐ.டி மெட்ராசில் இந்திய ராணுவ ஆராய்ச்சிப் பிரிவான 'அக்னிசோத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் உபேந்திர திவேதி பங்கேற்றார்.

    அப்போது பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பதிலடி கொடுக்க இந்தியா எவ்வாறு திட்டமிட்டது என்பது குறித்து அவர் கூறினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    ஏப்ரல் 22-ந்தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மறுநாளே ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. முப்படை தளபதிகளும், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் கூட்டத்தில் பங்கேற்றோம். அப்போது ராஜ்நாத்சிங், பொறுத்தது போதும் என்று முதல் முறையாக கூறினார்.

    முப்படை தளபதிகளும் ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்தோம். என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்ற முழு சுதந்திரம் எங்களுக்கு வழங்கப்பட்டது.

    அந்த வகையான நம்பிக்கை, அரசியல் திசை மற்றும் அரசியல் தெளிவை நாங்கள் முதன்முறையாக பார்த்தோம். முப்படைக ளுக்கும் அரசாங்கம் அளித்த அரசியல் தெளிவு மன உறுதியை அதிகரிக்க உதவி யது. அதுதான் நமது ராணுவத் தளபதிகள் களத்தில் இருந்து அவர்க ளின் விருப்பப்படி செயல் பட உதவியது.

    இந்த சந்திப்புக்கு 2 நாட்களுக்கு பிறகு பயங்கரவாத இலக்குகளை எவ்வாறு தாக்குவது என்பது குறித்து ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. ஏப்ரல் 25-ந்தேதி நாங்கள் வடக்கு கட்டளைப் பகுதியைப் பார்வையிட்டோம்.

    பின்னர் தாக்குதல் நடத்தப்பட வேண்டிய இலக்குகளை முடிவு செய்தோம். திட்டமிடப்பட்ட 9 இலக்குகளில் 7 முக்கிய இலக்குகளை முற்றிலும் அழித்தோம். இதில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    ஏப்ரல் 29 -ந்தேதி நாங்கள் பிரதமர் மோடியை சந்தித்தோம். ஆபரேஷன் சிந்தூர் என்ற சிறிய பெயர் முழு நாட்டையும் எவ்வாறு இணைக்கிறது என்பது முக்கியம். அதுதான் முழு நாட்டையும் உற்சாகப்படுத்தியது. அதனால்தான் முழு தேசமும் நீங்கள் ஏன் நிறுத்திவிட்டீர்கள் என்று கேட்டது. அதற்கு போதுமான பதில் அளிக்கப்பட்டுள்ளது.

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, சதுரங்க விளையாட்டு போல் இருந்தது. ஏனென்றால் எதிரியின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும், என்ன செய்யப் போகிறார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. இது சாம்பல் மண்டலம் என்று அழைக்கப்படுகிறது.

    சாம்பல் மண்டலம் என்பது நாம் வழக்கமான நடவடிக்கைகளை செய்ய போவதில்லை என்பதாகும். நமது வழக்கமான நடவடிக்கையை விட வித்தியாசமானது. நாங்கள் சதுரங்க நகர்வுகளைச் செய்து கொண்டிருந்தோம். எதிரிகளும் சதுரங்க நகர்வுகளைச் செய்து கொண்டிருந்தனர். எங்கோ நாங்கள் அவர்களுக்கு செக்மேட்டைக் கொடுத்துக் கொண்டிருந்தோம்.

    உரி மற்றும் பாலகோட் போன்ற முந்தைய பதிலடி தாக்குதலில் இருந்து ஆபரேஷன் சிந்தூர் வேறுபட்டது. உரி நடவடிக்கையின்போது, ஏவுதளங்களை குறி வைப்பதில் கவனம் செலுத்தப்பட்டது.

    2019-ம் ஆண்டு பாலகோட் தாக்குதல்களில், பதிலடி கொடுக்கும் விதமாக ஜம்மு-காஷ்மீர் வழியாக ஊடுருவி பாகிஸ்தானுக்குள் பயிற்சி முகாம்களைத் தாக்குவதே நோக்கமாக இருந்தது. ஆப ரேசன் சிந்தூர் நடவடிக்கையில் எதிரி பிரதேசத்திற்குள் ஆழமாக சென்று தாக்குதல் நடத்தப்பட்டது. நாங்கள் எதிரியின் மையப்பகுதியை அடைந்தது இதுவே முதல் முறை. இதுதான் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    மோதலில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அந்நாடு ஒரு கதையை சொல்லி கொண்டிருக்கிறது. நீங்கள் ஒரு பாகிஸ்தானியரிடம் தோற்றீர்களா அல்லது வென்றீர்களா என்று கேட்டால், அவர் எங்கள் ராணுவ தளபதிக்கு பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. எனவே நாங்கள் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இதனால்தான் எங்கள் ராணுவ தளபதி பீல்ட் மார்ஷலாக மாறிவிட்டார் என்று கூறுவார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×