என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கலைஞர் மகளிர் உதவித்தொகை பெற 29-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம்
- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது.
- தற்போதைய நிலையில் சுமார் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்.
சென்னை:
தமிழகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. இதற்காக 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் தகுதியான 1 கோடியே 6 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை வழங்கும் பணி தொடங்கியது.
அதன்பின்னர், விடுபட்ட 7 லட்சத்து 15 ஆயிரம் பெண்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து நிராகரிக்கப்பட்ட பெண்கள் மீண்டும் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் 11 லட்சத்து 86 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அதில் 1 லட்சத்து 48 ஆயிரம் பெண்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். தற்போதைய நிலையில் சுமார் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் மாதந்தோறும் கலைஞர் உரிமைத்தொகை பெற்று வருகின்றனர்.
இந்த உரிமைத்தொகை, ரேஷன் கார்டில் உள்ள குடும்பத்தலைவிக்கு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 2 கோடியே 26 லட்சத்து 14 ஆயிரத்து 128 குடும்ப அட்டைகள் உள்ளன. அதில் 1 கோடியே 14 லட்சம் பெண்கள் தவிர 1 கோடியே 12 லட்சம் பெண்கள் உரிமைத்தொகை பெற முடியவில்லை.
எனவே தகுதியான விடுபட்ட பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் என்று கடந்த சட்டசபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில் வருகிற 29-ந்தேதி முதல் இந்த உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பெண்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை உடனடியாக ஆய்வு செய்து 2 மாதத்திற்குள் அவர்களுக்கு உரிமைத்தொகை வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த முறை மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள், ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை, மக்களுடன் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மனுக்கள் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே அதற்கான முகாம் தமிழகம் முழுவதும் 29-ந்தேதி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






