என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முகவரி மோசடி என அபாண்டமாக பேசுவது கவுரவமா?- ஜி.கே. மணி குற்றச்சாட்டுக்கு வழக்கறிஞர் பாலு விளக்கம்
- அன்புமணி ராமதாஸ் பத்திரிகைகளுக்கு கொடுக்கும் அறிக்கையில் நம்பர் 10, திலக் தெரு, தி.நகர் என்றுதான் இருக்கும்.
- டாக்டர் ராமதாஸ் ஒப்புதலுடன் வழங்கப்பட்ட உறுப்பினர் கார்டிலும் தி.நகர் முகவரிதான் இருக்கும்.
பாமக நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் ராமதாஸ்தான். அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. அவர் எப்படி செயற்குழுவை கூட்ட முடியும். மாமல்லபுரத்தில் கூட்டிய கூட்டம் செல்லாது. தேர்தல் ஆணையம் தி.நகர் முகவரிக்கு கடிதம் அனுப்பியது, முகவரி மோசடி காரணமாக என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, அன்புமணி மீது மோசடி குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.
அதற்கு அன்புமணி ஆதரவாளரான வழக்கறிஞர் பாலு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கறிஞர் பாலு கூறியதாவது:-
முகவரி மோசடி என்கிறார். திடீரென்று நேற்றுதான் தெரிந்தது என்கிறார் ஜி.கே. மணி. 25 வருடம் கட்சியின் தலைவராக இருந்தவர். சட்டசபை மற்றும் பொது வெளியில் கட்சியாக பேசியவர். அவர் இப்படி அபாண்டமாக பேசுவது கவுரவ தலைவருக்கு கவுரவமா? என கேள்வி கேட்க விரும்புகிறேன்.
அன்புமணி ராமதாஸ் தலைவராக 2022ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட பிறகு, ஜூன் 1ஆம் தேதி தி.நகருக்கு தலைமை அலுவலகத்தை மாற்ற தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் கொடுத்து விட்டோம். அதில் இருந்து தி.நகர் திலக் தெருதான் தலைமை அலுவலகமாக இருந்து வருகிறது.
அன்புமணி ராமதாஸ் பத்திரிகைகளுக்கு கொடுக்கும் அறிக்கையில் நம்பர் 10, திலக் தெரு, தி.நகர் என்றுதான் இருக்கும். டாக்டர் ராமதாஸ் ஒப்புதலுடன் பாமக உறுப்பினர் கார்டு வழங்கப்பட்டது. அதற்கான பணி மேற்கொள்ளப்பட்டது. அதிலும் தி.நகர் முகவரிதான் இருக்கும்.
தேர்தல் ஆணையம் சார்பில் பல வருடங்களாக தி.நகர் முகவரிக்குதான் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏதோ, நேற்றுதான் திடீரென தெரிந்தது போன்று, பதட்டமாகி விட்டோம் என்று சொல்கிறார். அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. அதில் அலுவலகம் முகவரியை மாற்றிவிட்டதாக கூறும் குற்றச்சாட்டும் ஒன்று. இது நேற்றைய செய்தி அல்ல. ஒரு பழைய செய்தி.
அலுவலகம் மாற்றப்பட்டது எல்லோருக்கும் தெரியும். 63 நாட்டு முத்து நாய்க்கன் தெரு என்றால், தைலாபுரத்தில் உறுப்பினர் அட்டை சேர்க்கையின்போது ஜி.கே. மணி தூக்கிப் பிடித்த கார்டில் தைலாபுரம், விழுப்புரம் மாவட்டம் என ஏன் இருந்தது?. 63 நாட்டு முத்து நாய்க்கன் தெரு என இப்போது சொல்பவர், தைலாபுரம் என மாற்றி எப்படி செய்தி வெளியிட முடியும்.
இவ்வாறு பாலு தெரிவித்தார்.






