என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழக அரசு உழவர் அலுவலர் திட்டத்தை கைவிட வேண்டும்- அன்புமணி
- உழவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்தை தி.மு.க. அரசு தேவையின்றி திணிப்பது கண்டிக்கத்தக்கது.
- வேளாண்மையில் வல்லமை பெற்ற ஒருவர் தோட்டக் கலைப் பயிர்களின் சாகுபடிகளுக்கு ஆலோசனை வழங்கினால் அது பயனுள்ளதாக இருக்காது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டம் என்ற பெயரில் வேளாண் துறையின் பல்வேறு கிளைகளில் வெவ்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் அதிகாரிகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, அனைத்துப் பணிகளையும் செய்யும்படி தி.மு.க. அரசு கட்டாயப்படுத்துகிறது. அதிகாரிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவது மட்டுமின்றி, உழவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்தை தி.மு.க. அரசு தேவையின்றி திணிப்பது கண்டிக்கத்தக்கது.
அதிகாரிகள் எந்தெந்த துறைகளில் வல்லமை பெற்றிருக்கிறார்களோ, அவர்களை அந்தத் துறையின் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்வது தான் அறிவார்ந்த செயலாகும். வேளாண்மையில் வல்லமை பெற்ற ஒருவர் தோட்டக் கலைப் பயிர்களின் சாகுபடிகளுக்கு ஆலோசனை வழங்கினால் அது பயனுள்ளதாக இருக்காது.
எனவே, உழவர் அலுவலர் தொடர்பு 2.0 திட்டத்தை உடனடியாக ரத்து செய்து, ஒவ்வொரு துறையின் அதிகாரிகளும் அவரவர் துறைகளில் பணி செய்வதை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






