என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அன்புமணி நடைபயணத்துக்கு தடை விதிக்கப்படவில்லை - டி.ஜி.பி. அலுவலகம் விளக்கம்
    X

    அன்புமணி நடைபயணத்துக்கு தடை விதிக்கப்படவில்லை - டி.ஜி.பி. அலுவலகம் விளக்கம்

    • அன்புமணியின் நடைபயணத்துக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தடை விதித்திருப்பதாக நேற்று இரவு தகவல் வெளியானது.
    • செங்கல்பட்டில் இன்று மாலை 2-வது நாள் நடைபயணத்தை அன்புமணி தொடங்குகிறார்.

    சென்னை:

    பா.ம.க. தலைவரான டாக்டர் அன்புமணி 'உரிமை மீட்பு பயணம்' என்ற பெய ரில் சென்னையை அடுத்த திருப்போரூரில் இருந்து நேற்று மாலை நடைபயணத்தை தொடங்கினார்.

    இந்த பயணத்தால் வட மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று பா.ம.க. நிறுவனரான டாக்டர் ராமதாஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார்.

    இதனை ஏற்று அன்புமணியின் நடைபயணத்துக்கு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தடை விதித்திருப்பதாக நேற்று இரவு தகவல் வெளியானது. ஆனால் இதனை டி.ஜி.பி. அலுவலக அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

    இது தொடர்பாக டி.ஜி.பி. அலுவலக உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, அரசியல் கட்சியினர் நடத்தும் போராட்டங்கள், நடைபயணம் போன்ற சுற்றுப்பயணங்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக எப்போதுமே டி.ஜி.பி. அலுவலகத்தில் முடிவு எடுக்கப்படுவதில்லை. எந்தெந்த பகுதிகளில் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறதோ அங்குள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அலுவலகங்களில் தான் அது தொடர்பான முடிவு கள் எடுக்கப்படும். இது வழக்கமான நடைமுறை தான். டாக்டர் ராமதாஸ் அளித்துள்ள மனு தொடர்பாக அதனை பின்பற்றியே உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இது தொடர்பான சுற்றறிக்கையை சரியாக புரிந்து கொள்ளாமலேயே அன்புமணியின் நடைபயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவலை பரப்பிவிட்டார்கள். அதுபோன்று எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்றார்.

    இது தொடர்பான தகவலை அன்புமணியின் ஆதரவாளரான வக்கீல் பாலு, தனது இணைய தள பக்கத்திலும் வெளியிட்டு உள்ளார். அதில் டாக்டர் அன்புமணி ராமதாசின் தமிழக உரிமை மீட்புப் பயணம் திட்டமிட்டபடி தொடரும் என தெரிவித்துள்ளார்.

    இதன்படி செங்கல்பட்டில் இன்று மாலை 2-வது நாள் நடைபயணத்தை அன்புமணி தொடங்குகிறார். செங்கல்பட்டு மற்றும் உத்திரமேரூரில் இன்றைய நடைபயணத்தை முடிக்கும் அவர் நாளை காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரில் பயணம் மேற்கொள்கிறார்.

    மொத்தம் 100 நாட்கள் நடைபயணம் மேற்கொள்ளும் அன்புமணி நவம்பர் 1-ந்தேதி தர்மபுரியில் நடைபயணத்தை நிறைவு செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×