என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.372 கோடி மட்டும் ஒதுக்குவதா?- அன்புமணி ராமதாஸ் கண்டனம்
- ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நலன்களை அரசு பாதுகாக்கத் தவறிவிட்டதையே இது காட்டுகிறது.
- கிட்டத்தட்ட எட்டில் ஒரு பங்கு அளவுக்கு அதாவது 1279 தொழிலாளர்களுக்கு மட்டுமே ரூ.372.06 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் பல ஆண்டுகள் பணியாற்றி கடந்த 2022-ம் ஆண்டு திசம்பர் மாதம் முதல் 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 4 மாதங்களில் ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற 1279 தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்புத் தொகை மற்றும் ஓய்வூதிய ஒப்படைப்புத் தொகை உள்ளிட்ட பணப்பலன்களுக்காக ரூ.372.06 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நலன்களை அரசு பாதுகாக்கத் தவறிவிட்டதையே இது காட்டுகிறது. இது கண்டிக்கத்தக்கது.
அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் பணியாற்றி கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ஓய்வு பெற்ற பணியாளர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய பத்தாயிரம் ஆகும். அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வுக்கால பயன்களின் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.3,000கோடி ஆகும். ஆனால், கிட்டத்தட்ட எட்டில் ஒரு பங்கு அளவுக்கு அதாவது 1279 தொழிலாளர்களுக்கு மட்டுமே ரூ.372.06 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது.
ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்கள் அனைவரும் தீப ஒளி திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அவர்களுக்கான ஓய்வூதிய பயன்களை அரசு உடனடியாக வழங்க வேண்டும். இனிவரும் காலங்களில் ஓய்வு பெறும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு அவர்கள் ஓய்வு பெறும் நாளில் ஓய்வுக்கால பயன்களை வழங்குவதை அரசு வழக்கமாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






