என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மதுரைக்கு அமித்ஷாவின் வருகை சட்டமன்ற தேர்தலுக்கு அறிவிக்கப்படாத பிரசாரம்தான் - பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர்
    X

    மதுரைக்கு அமித்ஷாவின் வருகை சட்டமன்ற தேர்தலுக்கு அறிவிக்கப்படாத பிரசாரம்தான் - பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர்

    • தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி மதுரையை மையப்படுத்தி அரசியல் நகர்வுகள் தொடங்கியுள்ளன.
    • மாநில அரசியலை பொறுத்தவரை எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் ஆகியோரும் மதுரையில்தான் அரசியல் கட்சிகளை தொடங்கினர்.

    மதுரை:

    2026 சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் நகர்வுகள் வேகம் எடுத்துள்ளன. அதன் ஒரு பகுதியாக வருகிற 8-ந்தேதி மதுரையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.

    இதற்காக அவர் நாளை (7-ந்தேதி) இரவு மதுரை வருகிறார். தனியார் ஓட்டலில் வைத்து மாநில நிர்வாகிகளை சந்திக்கும் அவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார். மறுநாள் (8-ந்தேதி) மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து மாலை ஒத்தக்கடை வேளாண்மை கல்லூரி அருகே வேலம்மாள் திடலில் நடைபெறும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    கூட்டணியை பலப்படுத்தும் வகையில் பல்வேறு வியூகங்களை வகுத்தல், தென்மாவட்டங்களில் கூடுதல் தொகுதிகளில் வெற்றிபெற முனைப்பு காட்டுதல் உள்ளிட்டவைகளை இலக்காக கொண்டு இந்த கூட்டத்திற்கு மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

    அரசியலும், ஆன்மீகமும் கலந்த மதுரை மண்ணில் இருந்து சட்டமன்ற தேர்தலுக்கான பிரசார பணியை தொடங்க முடிவு செய்துள்ள பா.ஜ.க., நிச்சயம் இந்த கூட்டம் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதில் உறுதியாக இருக்கிறது. இந்தநிலையில் மதுரையில் இன்று பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் ராம.சீனிவாசன் அளித்த சிறப்பு பேட்டியில் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி மதுரையை மையப்படுத்தி அரசியல் நகர்வுகள் தொடங்கியுள்ளன. காரணம், மதுரை தமிழகத்தின் உணர்ச்சி களம். ஒட்டுமொத்த அரசியல் உணர்வு களமாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 2006-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது, தேசிய அளவிலான பிரசாரத்தை அப்போதைய பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மதுரையில்தான் தொடங்கினார்.

    மாநில அரசியலை பொறுத்தவரை எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் ஆகியோரும் மதுரையில்தான் அரசியல் கட்சிகளை தொடங்கினர். மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சென்னை, கன்னியாகுமரிக்கு வந்துள்ளார். தென் மாவட்டங்களுக்கு வரவில்லை என்ற குறை இருந்தது. அதனை போக்கவே தற்போது அவர் மதுரை வருகிறார். நடந்த முடிந்த பாராளுமன்ற தேர்தலின்போது மதுரை தொகுதியில் போட்டியிட்ட என்னை ஆதரித்து ரோடு-ஷோ நடத்தி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

    அதற்கு பலனாக மதுரையில் பா.ஜ.க. இரண்டாவது இடத்தை பிடித்தது. அதன் முக்கியத்துவத்தை அறிந்தும் அமித்ஷா மதுரை வருகை தர உள்ளார். இந்த கூட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள், மண்டல் நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். இது முழுக்க முழுக்க நிர்வாகிகளுக்கான கூட்டம் தான். செயல்வீரர்களுடன் அமித்ஷா பேசுகிறார்.

    பா.ஜ.க.வை பொறுத்தவரை தமிழக சட்டமன்ற தேர்தல் களம் வருகிற 8-ந்தேதி மதுரையில் அமித்ஷா வருகையுடன் தொடங்குகிறது. இது ஒரு அறிவிக்கப்படாத தேர்தல் பிரசாரம் தான். அப்போது முதல் ஆபரேசன் கவுண்டவுன் தொடங்கிவிடுகிறது. அதாவது ஜூன் 8-ந்தேதி முதல் தி.மு.க. ஆட்சிக்கான கவுண்டவுன் தொடங்கி நாட்கள் எண்ணப்படுகிறது.

    அமித்ஷாவின் வருகையானது கூட்டணியை பலப்படுத்துதலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அதனால் புதிய கட்சிகளை சேர்ப்பதாக அர்த்தமல்ல. இருக்கும் கட்சிகளின் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக வியூகங்கள் வகுக்கப்படும். பொதுவான செயல்திட்டங்கள், தி.மு.க.வுக்கு எதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தப்படும். அதன் மூலம் தி.மு.க. மீதான அதிருப்தி ஆத்திரமாக மாறும்.

    உண்மையை எடுத்துச் சொல்லும்போது மக்கள் அதனை புரிந்து கொள்வார்கள். அதற்காக நாங்கள் பொய் சொல்லப்போவதில்லை. உண்மையை எடுத்துக்கூறுவதால் மக்கள் புரிதலோடு, விழிப்புணர்வாகவும் மாறும். சமீபத்தில் சென்னை வருகை தந்த மத்திய மந்திரி அமித்ஷா தங்களை சந்திக்கவில்லை என்று ஓ.பி.எஸ். கூறியிருந்தார். எங்களை பொறுத்தவரை ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் ஆகியோர் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறார்கள். அவர்கள் இருவரும் எங்களது மதிப்புமிக்க தலைவர்கள். இந்த முறை மதுரை வருகை தரும் அமித்ஷா அவர்களை சந்திக்கலாம்.

    நாங்கள் இந்தியா கூட்டணி போல் கிடையாது. அனைவரையும் அழைத்து ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக்கொண்டு உயர்த்தி காட்டி பலத்தை எடுத்துரைப்பது. விட்டால் அவர்கள் ஓடிப்போய்விடுவார்கள் என்பதால் அதுபோன்று நடந்து கொள்கிறார்கள். எங்கள் கூட்டணி அப்படி அல்ல.

    பழனியில் தமிழக அரசு நடத்திய முத்தமிழ் முருகன் மாநாடு என்பது வெளிப்படையான முருகன் மாநாடு. உள்ளுக்குள் சனாதன ஒழிப்பு மாநாடு. வெளிப்படையாக முருகனை பற்றி பேசிக்கொண்டு உள்ளுக்குள் இந்து விரோத காழ்ப்புணர்ச்சியுடன் பேசுகிறார்கள். இந்து தர்மம், இந்து மரபு, இந்து பண்பாடு, குறைந்தபட்சம் இந்து என்ற வார்த்தையில் கூட அவர்களுக்கு மரியாதை கிடையாது. நாங்கள் உள்ளும், வெளியி ம் முருக பக்தர்கள். அவர்கள் பசுத்தோல் போர்த்திய புலி, நாங்கள் எப்போதும் பசுதான்.

    பாராளுமன்ற தேர்தலில் தென் மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளில் நாங்கள் கன்னியாகுமரி, நெல்லை, ராமநாதபுரம், மதுரை, தேனி ஆகிய 5 தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்தோம். இது தவிர தமிழகத்தில் உள்ள மற்ற 29 தொகுதிகளில் கோவை, ஊட்டி, மத்திய சென்னை, தென்சென்னை, தர்மபுரி ஆகிய 5-ல் இரண்டாம் இடம் பிடித்தோம். ஒட்டுமொத்தமாக 29-ல் 5 இடங்களிலும், தென்மாவட்டங்களில் உள்ள 10-ல் 5 இடங்களிலும் இரண்டாம் இடத்தை பா.ஜ.க. பெற்றுள்ளது.

    சட்டமன்றத்திலும் மதுரை மாவட்டத்தில் உள்ள மதுரை மத்தி, தெற்கு, கிழக்கு ஆகிய தொகுதிகளிலும் 2-ம் இடம் கிடைத்துள்ளது. தி.மு.க. வேண்டுமானால் தெற்கு தேய்கிறது என்று கூறலாம். பா.ஜ.க.வை பொறுத்தவரை தெற்கு வளர்கிறது. இதுபோன்ற காரணங்களால் தமிழ் நாட்டில் தென்மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், குறிவைத்தும் பா.ஜ.க. செயலாற்றி வருகிறது. அதற்கான முன்னோட்டம் தான் அமித்ஷாவின் மதுரை வருகையும்.

    இந்த கூட்டம் தேர்தல் வந்துவிட்டது, தயாராகுங்கள் தொண்டர்களே என்பதை அறிவிக்கும் ஒரு பிரசாரமாகவும், பணியாகவும் இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×