என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ரூ.20-க்கு ரெயில் பயணிகளுக்கு கிடைக்கும் மலிவு விலை உணவு
- திட்டம் குறித்து பல பயணிகளுக்கு இன்றளவும் தெரிவதில்லை.
- முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் வந்து நிற்கும் இடத்தில் வைத்து பயணிகளுக்கு நேரடியாக உணவு வழங்குகின்றன.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டம், ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்து முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக கடந்த 2023-ம் ஆண்டு ரூ.20-க்கு 'சிக்கன உணவு' என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த 'சிக்கன உணவு' திட்டத்தின் நோக்கம் பயணிகளுக்கு சத்தான மற்றும் குறைந்த விலை உணவுகளை வழங்குவதாகும். இத்திட்டம் குறித்து பல பயணிகளுக்கு இன்றளவும் தெரிவதில்லை.
எனவே, சென்னை சென்டிரல், எழும்பூர், செங்கல்பட்டு, அரக்கோணம், காட்பாடி ஆகிய ரெயில் நிலையங்களில் சிக்கன உணவு விற்பனை மையங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், 27 ரெயில் நிலையங்களில் 64 சிக்கன உணவு கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்கள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் வந்து நிற்கும் இடத்தில் வைத்து பயணிகளுக்கு நேரடியாக உணவு வழங்குகின்றன.
இந்த கடைகளில் 200 கிராம் எடையுள்ள எலுமிச்சை சாதம், தயிர் சாதம், புளி சாதம், பருப்பு கிச்சடி மற்றும் பூரி-கிழங்கு போன்ற அரிசி வகை உணவுகள் விற்பனை செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






