என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பெண்கள்-மாணவர்களை கவரும் வகையில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாராகிறது
- 10 பேர் கொண்ட குழுவை எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 25-ந்தேதி அறிவித்தார்.
- அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை வர இருக்கும் நிலையில் அதற்கடுத்த வாரம் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. தீவிரமாக தயாராகி வருகிறது.
தமிழக மக்களில் ஒரு பிரிவினர் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் அளிக்கும் வாக்குறுதிகள் மற்றும் இலவச அறிவிப்புகளை பார்த்தும் ஓட்டு போட்டு வருகிறார்கள். அந்த வகையில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் பல தேர்தல்களில் கதாநாயகன்களாகவே திகழ்ந்துள்ளன.
அந்த வகையில் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை சிறந்த முறையில் தயாரிப்பதற்கு அந்த கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இப்படி தேர்தல் அறிக்கையை சிறப்பாக தயாரிப்பதற்காக அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள் அடங்கிய 10 பேர் கொண்ட குழுவை எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 25-ந்தேதி அறிவித்தார்.
இவர்கள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு அறிவார்கள் என்றும் அதற்கு ஏற்ப தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை தயாரிக்கும் பணி இன்று தொடங்கி உள்ளது.
தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் இடம் பெற்றுள்ள அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளரான நத்தம் விஸ்வநாதன் மற்றும் முன்னணி நிர்வாகிகளான பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார் சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணியன், ஆர்.பி. உதயகுமார், வைகை செல்வன் ஆகியோர் ராயப்பேட்டையில் உள்ள அ.தி. மு.க. தலைமைக் கழகத்தில் இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை பெண்கள் மற்றும் மாணவர்கள், இளைஞர்களை கவரும் முறையில் தயாரிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருக்கிறார். அதற்கேற்ற வகையில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் என்னென்ன தகவல்களை இடம்பெறச் செய்யலாம் என்பது பற்றியும், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணத்தை எப்போது தொடங்கலாம் என்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை வர இருக்கும் நிலையில் அதற்கடுத்த வாரம் சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு சுற்றுப்பயண விவரங்களை திட்டமிடுவதற்கு தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு திட்டமிட்டு உள்ளது.
இன்று நடைபெறும் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் பற்றி தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு எடப்பாடி பழனிசாமியிடம் எடுத்துரைக்க உள்ளது.
இதன் பின்னர் அவரது அறிவுறுத்தலின் பேரில் இன்னும் சில தினங்களில் அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பொது மக்களின் கருத்துக்களை கேட்க உள்ளனர்.






