என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் இருந்து பொங்கலுக்கு 22,792 பேருந்துகள் இயக்க திட்டம்!
- தினசரி இயக்கப்படும் 12,552 பேருந்துகளுடன் 10,245 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம்.
- இந்தாண்டு சென்னையிலிருந்து 11.35 லட்சம் பேர் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வார்கள் என கணிப்பு
ஆண்டுதோறும் பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகைகளின்போது வெளியூர்களில் வசிக்கும் பொதுமக்களின் நலனுக்காக, அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும்பொருட்டு தமிழ்நாடு போக்குவரத்துறை சார்பில் பெருநகரங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு பொங்கலுக்கு சென்னையில் இருந்து 22,792 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தினசரி இயக்கப்படும் 12,552 பேருந்துகளுடன் 10,245 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம். இந்த சிறப்பு பேருந்துகள் ஜனவரி 9ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை இயக்கப்படும். கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பண்டிகை முடிந்து சென்னைக்கு திரும்ப ஜன.16 முதல் ஜன.19 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்தாண்டு சென்னையிலிருந்து 11.35 லட்சம் பேர் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்வார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான முக்கிய ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமையில் தலைமைச் செயலக அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. விரைவில் அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.






