என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 48 தமிழர்கள் இன்று ரெயிலில் சென்னை திரும்பினர்
- சொந்த ஊர்களுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு.
- 3 வேளையும் உணவு கொடுத்து தமிழக அரசு உதவி செய்தது.
சென்னை:
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அங்குள்ள தமிழர்களை மீட்டு பாதுகாப்பாக கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
ரெயில், விமானம் மூலம் சுற்றுலா சென்ற பயணிகளை கணக்கெடுத்து அவர்களை மீட்டு டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
பயண நாள் தள்ளி இருந்தாலும் அதனை முன் தேதிக்கு மாற்றி விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்தது.
அதன்படி நேற்று 2 கட்டமாக டெல்லியில் இருந்து தமிழக சுற்றுலாப் பயணிகள் அழைத்துவரப்பட்டனர். விமான நிலையத்தில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மதுரை, கும்பகோணம், ஈரோடு, திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அவர்கள் பாதுகாப்பாக செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் அரசு செய்தது.
இந்த நிலையில் ரெயில் மூலம் 48 பேர் டெல்லியில் இருந்து சென்னை வருவதற்கு அரசு ஏற்பாடு செய்யப்பட்டு நேற்று முன்தினம் அவர்கள் பயணத்தை தொடங்கினர்.
டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் உணவு, தங்கும் வசதி அளிக்கப்பட்டு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தனர். அந்த ரெயில் இன்று காலை 6.30 மணிக்கும் சென்ட்ரல் ரெயில் நிலையம் வந்து சேர்ந்தது.
காஷ்மீர் சென்றவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பாக சென்னை வந்ததையொட்டி அவர்களை அழைத்து செல்ல உறவினர்கள் குடும்பமாக வந்திருந்தனர். வியாசர்பாடி, மாதவரம், சிட்லபாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகு தியை சேர்ந்த அவர்களை உறவினர்கள் பார்த்ததும் கட்டிப்பிடித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
மேலும் பிற பகுதிகளுக்கு செல்ல அரசு சார்பில் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு, உணவு, குடிநீர், பிஸ்கட் போன்றவை வழங்கி அனுப்பி வைக்கப் பட்டனர்.
காஷ்மீர் சென்று திரும்பிய சென்னையை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் விஜயகுமார், பாஸ்கர், முனியாண்டி, பிரபாவதி, தேன்மொழி ஆகியோர் கூறியதாவது:-
பஹல்காம் சுற்றுலா பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு முதல்நாள் அங்கு சென்று திரும்பினோம். ஒருநாள் முன்னதாக சென்றதால் இந்த சம்பவத்தில் இருந்து தப்பித்து உள்ளோம்.
சம்பவம் நடந்த உடனே எங்களை பாதுகாப்பாக அழைத்து வந்தனர். டெல்லிக்கு அழைத்துவரப் பட்டு தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைத்து 3 வேளையும் உணவு கொடுத்து தமிழக அரசு உதவி செய்தது.
சென்னை திரும்பும் வரை எங்களுக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரி களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மற்ற மாநிலங்களைவிட தமிழகம் அமைதி பூங்காவாக உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதைத்தொடர்ந்து விமானம் மூலம் மேலும் 28 பேர் இன்று இரவு சென்னை திரும்புகின்றனர். காஷ்மீர மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற தமிழர்களில் இது வரை 119 பேர் பத்திரமாக திரும்பியுள்ளனர்.






