என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வைகை அணையில் இருந்து 3073 கனஅடி வெளியேற்றம்- சுருளி, கும்பக்கரையில் தொடர் வெள்ளப்பெருக்கு
    X

    வைகை அணையில் இருந்து 3073 கனஅடி வெளியேற்றம்- சுருளி, கும்பக்கரையில் தொடர் வெள்ளப்பெருக்கு

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.80 அடியாக உள்ளது.
    • வருசநாடு பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் தொடர்மழையால் முல்லை பெரியாறு, போடி கொட்டக்குடியாறு, மூல வைகையாறு, வராகநதி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் கடந்த 18ம் தேதி நீர்மட்டம் 62.66 அடியாக இருந்தது. தொடர்மழை காரணமாக நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 3ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே உபரியாக வெளியேற்றப்படுகிறது.

    நீர்வரத்தை பொறுத்து அணையில் இருந்து தண்ணீரை திறந்து விடும் அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக 69.13 அடியாக நிலைநிறுத்தி கண்காணித்து வருகின்றனர். அணையில் நீர்வரத்து 3463 கனஅடியாக உள்ளது. ஆற்றின் வழியாகவும், பாசனத்திற்கும், குடிநீருக்காகவும் என மொத்தம் அணையிலிருந்து 3073 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. 5605 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.80 அடியாக உள்ளது. 201 கனஅடி நீர் வருகிற நிலையில் திறப்பு இல்லை. தொடர்ந்து பெய்து வரும் மழையால் சோத்துப்பாறை அணை கடந்த 2 நாட்களுக்கு முன்பு முழு கொள்ளளவான 126.28 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் 252.37 கனஅடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் ஆற்றை கடக்கவோ, குளிக்கவோ கூடாது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    சண்முகாநதி அணையும் அதன் முழு கொள்ளளவான 52.50 அடியில் நீடிக்கிறது. அணைக்கு வரும் 16 கனஅடி நீர் உபரியாக திறக்கப்படுகிறது.

    கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இன்றும் 12-வது நாளாக நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால் தடை தொடரும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். மேலும் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதால் 5வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் ஆண்டிபட்டி அருகே வருசநாடு பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அங்கும் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஆண்டிபட்டி 12, அரண்மனை புதூர் 7.6, வீரபாண்டி 7.6, பெரியகுளம் 9.2, மஞ்சளாறு 12.6, சோத்துப்பாறை 8.2, வைகை அணை 13.2, போடி 16.2, உத்தமபாளையம் 6.8, கூடலூர் 3.8, பெரியாறு அணை 4.2, தேக்கடி 3.6, சண்முகாநதி 9.4 மி.மீ. மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×