என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    1510 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
    X

    1510 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

    • 25 ‘கலங்கரை’ ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை திறந்து வைத்தார்.
    • நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுவரை தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 2649 தமிழ்நாடு அரசு ஊழியர் வாடகை குடியிருப்புகள், 401 அடுக்குமாடி குடியிருப்புகள், 1603 மனை மேம்பாட்டு திட்டம், 10 வணிக வளாகங்கள், 7 வாரிய கோட்ட அலுவலகங்கள் மற்றும் நகர் ஊரமைப்பு இயக்ககத்திற்கு 3 கோட்ட அலுவலகங்கள் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.

    இப்போது சென்னை செனாய் நகரில் 131 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 240 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கே.கே நகரில் 51 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 120 அடுக்குமாடி குடியிருப்புகள், செங்கல்பட்டு, ராஜகுளிப்பேட்டையில் 43 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 116 அடுக்குமாடி குடியிருப்புகள்; நெற்குன்றத்தில் 433 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 570 அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு அலுவலர் வாடகை குடியிருப்பு திட்டத்தின் கீழ் திருச்சி செங்குளத்தில் 116 கோடியே 55 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 464 அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 776 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள 1510 குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர் முத்துசாமி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் தலைவர் பூச்சி, முருகன், மேலாண்மை இயக்குநர் சமீரன் கலந்து கொண்டனர்.

    அதே போல் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களின் நலன் காக்கும் தமிழ்நாடு அரசு கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 15 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 25 'கலங்கரை' ஒருங்கிணைந்த போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை திறந்து வைத்தார்.

    மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான உயர்த்தப்பட்ட அரசு மானியம் ரூ. 13 கோடிக்கான காசோலையை சுசீந்திரம் - கன்னியாகுமரி தேவஸ்தான கோயில்கள் அறங்காவலர் குழுத் தலைவர் ராமகிருஷ்ணனிடமும், புதுக்கோட்டை தேவஸ்தான நிர்வாகத்தின்கீழ் உள்ள 225 கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான உயர்த்தப்பட்ட அரசு மானியம் ரூ.8 கோடிக்கான காசோலையை புதுக்கோட்டை மாவட்ட கோயில்களின் தக்கார், உதவி ஆணையர் சுரேஷ் வசமும், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான நிருவாகத்திலுள்ள 88 கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்கான உயர்த்தப்பட்ட அரசு மானியம் ரூ.6 கோடிக்கான காசோலையை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லேவிடமும் என மொத்தம் ரூ.27 கோடிக்கான காசோலைகளை கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக உயர்த்தப்பட்ட அரசு மானியமாக வழங்கினார்.

    நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×