search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சதிவலை பின்னியது யார்...? விரைவில் வெளிச்சத்துக்கு வரும்: ஓ.பி.எஸ். பரபரப்பு பேட்டி
    X

    சதிவலை பின்னியது யார்...? விரைவில் வெளிச்சத்துக்கு வரும்: ஓ.பி.எஸ். பரபரப்பு பேட்டி

    • அடுத்து நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்க தீவிரம்
    • ஓ.பன்னீர்செல்வம் நாளை மறுநாள் அ.தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு சென்று ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்


    அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை கோஷம் தீவிரமடைந்த நிலையில், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே கடும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பொதுக்குழு கூட்டத்திலும் குழப்பம் நீடித்தது. இதனால் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் பொதுக்குழு முடிந்தது. அடுத்து நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இந்த சூழ்நிலையில் டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் நேற்று சென்னை திரும்பினார். சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்வதற்காக இன்று மதியம் விமானம் மூலம் மதுரை வந்தார். அவருக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். கட்சியின் பொதுச்செயலாளர் ஓபிஎஸ் என ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பினர்.

    பின்னர் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், "அதிமுக தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர்" என்றார்.

    'அதிமுகவில் நடைபெறும் சம்பவங்கள் யாரால் நடத்தப்படுகிறது என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வரும். யாரால் சதிவலை பின்னப்பட்டது என்பது விரைவில் வெளிச்சத்துக்கு வரும். சதிவலையை பின்னியவர்களுக்கு உரிய தண்டனையை மக்களே வழங்குவார்கள். ஜெயலலிதாவின் இதயத்தில் இருந்து என்னை யாராலும் நீக்க முடியாது' என்றும் ஓபிஎஸ் கூறினார்.

    நாளை மறுநாள் ஓ.பன்னீர்செல்வம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தற்கு சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். அன்று அமாவாசை தினம் என்பதால் ஓ.பன்னீர்செல்வம் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அ.தி.மு.க.வை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில் அவரது அறிவிப்புகள் இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. இதனால் ஓ.பன்னீர்செல்வத்தின் ரகசிய திட்டங்களை முறியடிக்க எடப்பாடி பழனிசாமி அணியினரும் தயாராகி வருகின்றனர்.

    Next Story
    ×