search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    என்.எல்.சி. போராட்டத்தில் வன்முறை.. அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு
    X

    என்.எல்.சி. போராட்டத்தில் வன்முறை.. அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு

    • என்.எல்.சி.யின் சுரங்க விரிவாக்க பணிகளுக்கு பரவனாறு மாற்றுப்பாதை என்பது மிக மிக முக்கியமானது.
    • அறவழியில் போராட்டம் என்பதை தாண்டி அது வன்முறையாக மாறியது கண்டனத்திற்குரியது.

    மதுரை:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக கையகப்படுத்தப்பட் நிலத்தில் முதற்கட்ட பணியை என்எல்சி நிறுவனம் தொடங்கி உள்ளது. கால்வாய் அமைப்பதற்காக அந்த நிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் தொடர் போராட்டம் நடைபெறுகிறது.

    இன்று நடைபெற்ற முற்றுகைப் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது. போலீசார் தடியடி நடத்தினர். போராட்டம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தற்போதைய சூழலில் என்.எல்.சி.யின் சுரங்க விரிவாக்க பணிகளுக்கு பரவனாறு மாற்றுப்பாதை என்பது மிக மிக முக்கியமானது. அதை செய்தால்தான் சுரங்கத்தின் மற்ற பணிகளை மேற்கொள்ள முடியும். அப்போது தான் மின்சார உற்பத்தி பாதிக்காமல் இருக்கும்.

    எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்டவர்களுடன் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக பலமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. நில உரிமையாளர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்கப்பட்டபிறகும் சிலர் நிலத்தை வழங்காமல் உள்ளனர். திடீரென இந்த முடிவை நிர்வாகம் எடுக்கவில்லை. விவசாயிகளிடம் ஏற்கனவே டிசம்பர் மாதத்திறகு பிறகு நிலத்தில் பயிர் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இருந்தாலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு பயிர்களை சாகுபடி செய்தனர்.

    அறவழியில் போராடுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த சூழ்நிலையில், சில அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதாக அறிவித்து அறவழியில் போராட்டம் என்பதை தாண்டி அது வன்முறையாக மாறியுள்ளது. இது கண்டனத்திற்குரியது. தமிழக அரசு வன்முறையை தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் அனுமதிக்காது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் யாராக இருந்தாலும் அரசு கடுமையான நடவடிக்கையை எடுக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×