என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வேலூரின் மருமகன் விஜயகாந்த்
- நண்பர்கள் மூலம் தகவல் கிடைத்து பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது.
- விஜயகாந்த் மரண செய்தி கேட்டு பிரேமலதாவின் சொந்த ஊரான செம்பேடு கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
விஜயகாந்த் பிரேமலதாவை 1990-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிரேமலதாவின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள செம்பேடு கிராமம்.
மதுரை திருமங்கலத்தில் பிறந்து முன்னணி நடிகரான விஜயகாந்த் பிரேமலதாவை எப்படி திருமணம் செய்து கொண்டார் என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த காலம் விஜயகாந்துக்கு அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் பெண் பார்க்க தொடங்கினார்கள்.
விஜயகாந்தின் நண்பர்களின் மூலம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கண்ணையா என்பவருக்கு பிரேமலதா என்ற மகள் இருப்பது தெரியவந்தது. அப்போது கண்ணையா ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மேலாளராக பணியாற்றி வந்தார்.
அவரது 2-வது மகளான பிரேமலதா பள்ளி படிப்பை ஆம்பூர் சர்க்கரை ஆலை பள்ளியில் முடித்துவிட்டு காட்பாடி ஆச்சிலியம் கல்லூரியில் படிப்பை முடித்திருந்தார்.
நண்பர்கள் மூலம் தகவல் கிடைத்து பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை தொடர்ந்து முதல் பார்வையிலேயே பிரேமலதாவை பிடித்துப்போக விஜயகாந்த் பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார்.
இதன் மூலம் விஜயகாந்த் வேலூரின் மருமகன் ஆனார்.
விஜயகாந்த் மரண செய்தி கேட்டு பிரேமலதாவின் சொந்த ஊரான செம்பேடு கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உறவினர்கள் பலர் சென்னைக்கு குடும்பத்தோடு சென்று அஞ்சலி செலுத்தினார்கள். விஜயகாந்த் மரணத்தால் செம்பேடு கிராமம் சோகத்தில் மூழ்கியது.
செம்பேடு கிராமத்தில் பிரேமலதாவின் குலதெய்வம் கோவிலான முனீஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவிற்கு ஆரம்ப கட்டத்தில் விஜயகாந்த் வந்துள்ளார்.
கடைசியாக 2017-ம் ஆண்டு முனீஸ்வரன் கோவிலை புதிதாக கட்டி கும்பாபிஷேகம் செய்தனர். அந்த விழா விஜயகாந்த் தலைமையில் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
செம்பேடு கிராமத்திற்கு வரும்போது எளிமையாக விஜயகாந்த் பழகுவார் என அவரது நினைவுகளை உறவினர்கள் தெரிவித்தனர்.






