search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் நாளை 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்
    X

    தமிழகத்தில் நாளை 1 லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்

    • நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 31-வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
    • தற்போதைய நிலையில் 78.78 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் கொரோனா சிறப்பு தடுப்பு முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதில் 2-ம் தவணை, பூஸ்டர் (ஊக்கத்தவணை) தடுப்பூசி செலுத்துவோருக்கு முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தடுப்பூசிகள் செலுத்தும் பணி 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ந்தேதி தொடங்கியது.

    தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் நிறைவடைந்தவர்களுக்கு பூஸ்டர் தவணை தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    முன்னதாக தமிழகத்தில் அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி செலுத்த வாரம் தோறும் சனிக்கிழமைகளில் 50 ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

    அதைத்தொடர்ந்து ஒரு லட்சம் இடங்களில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கடந்த மே 8-ந்தேதி கடந்த ஜூன் 12-ந்தேதி தமிழகம் முழுவதும் அத்தகைய முகாம்கள் நடைபெற்றன. இந்த நிலையில் 31-வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் ஒரு லட்சம் இடங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

    இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 31-வது சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் இதுவரை சுமார் 11.45 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

    முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், குறிப்பிட்ட காலத்தில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவடைந்தும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் என சுமார் 1.45 கோடிக்கும் அதிகமானோர் உள்ளனர்.

    தற்போதைய நிலையில் 78.78 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

    தடுப்பூசி முகாம் பணியில் ஈடுபடும் சுகாதாரப் பணியாளர்களுக்கு வருகிற திங்கட்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால் அன்றைய தினத்தில் வழக்கமான தடுப்பூசி மையங்கள் செயல்படாது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

    Next Story
    ×