என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி உறுதி- உதயநிதி ஸ்டாலின் பேச்சு
    X

    உதயநிதி ஸ்டாலின்

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி உறுதி- உதயநிதி ஸ்டாலின் பேச்சு

    • இளைஞர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பாசறையை நடத்திக் கொண்டு இருக்கிறேன்.
    • கடந்த பாராளுமன்ற தேர்தலைவிட மிக அதிகமான வெற்றியை பெற நீங்கள் எங்கள் அனைவருக்கும் கட்டளையிடுங்கள்.

    சென்னை:

    பொதுக்குழுவில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    2021 சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை அளித்து முதல்-அமைச்சராக அமர வைத்து அழகு பார்த்திருக்கிறார்கள். நீங்கள் தலைவராக பொறுப்பேற்ற பிறகு தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் வெற்றி பெற்று இருக்கிறீர்கள்.

    இந்த வெற்றி கண்டிப்பாக தொடரும். அந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம் தமிழக மக்கள். நீங்கள் தமிழக மக்களுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். உங்கள் உழைப்பை பார்க்கும்போது எங்களுக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கும்.

    இந்த வெற்றிக்கு உங்களின் 50 வருட உழைப்பு மிக முக்கிய காரணம். உங்கள் உழைப்பையும், பிரசாரத்தையும் மக்களிடம் கொண்டு சேர்த்த ஒவ்வொரு தொண்டர்களுமே வெற்றிக்கு காரணம். கழக தொண்டர்களின் உணர்வுகளுக்கு நீங்கள் உரிமை கொடுப்பீர்கள் என்று நம்பி எனது வாழ்த்துக்களை கூறுகிறேன்.

    இளைஞர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் திராவிட மாடல் பயிற்சி பாசறையை நடத்திக் கொண்டு இருக்கிறேன். 200 தொகுதிகளில் திராவிட மாடல் பயிற்சி பாசறை நடத்தி முடித்து இருக்கிறோம்.

    கழகத்தில் 19 அணிகள் இருக்கின்றன. இந்த 19 அணிக்கும் நீங்கள் ஒரு இலக்கு கொடுக்க வேண்டும். ஏனென்றால் எல்லா அணியும் முக்கியம். மகளிர் அணி செயலாளராக இருந்த கனிமொழி இப்போது துணை பொதுச் செயலாளராக இருக்கிறார்.

    மாணவர் அணி செயலாளராக இருந்த துரை முருகன் இப்போது பொதுச்செயலாளராக இருக்கிறார். இளைஞர் அணி செயலாளராக இருந்த நீங்கள் இப்போது கழகத்தின் தலைவராக தமிழகத்தின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்று இருக்கிறீர்கள். எனவே நீங்கள் அத்தனை பேருக்கும் நீங்கள் கட்டளையிடுங்கள்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறப்போவது உறுதி. கடந்த பாராளுமன்ற தேர்தலைவிட மிக அதிகமான வெற்றியை பெற நீங்கள் எங்கள் அனைவருக்கும் கட்டளையிடுங்கள். உங்கள் கட்டளையை ஏற்று வெற்றிக்கு நாங்கள் பாடுபடுவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×