search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜனாதிபதியை அழைக்கவில்லை; கங்கனாவை அழைக்கிறார்கள்: சனாதனம் குறித்து உதயநிதி மீண்டும் விமர்சனம்
    X

    "ஜனாதிபதியை அழைக்கவில்லை; கங்கனாவை அழைக்கிறார்கள்": சனாதனம் குறித்து உதயநிதி மீண்டும் விமர்சனம்

    • பெண்கள் சார்பில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அழைக்கப்பட்டிருந்தார்
    • மலைவாழ் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் ஜனாதிபதியை அழைக்கவில்லை

    கடந்த செப்டம்பர் 2 அன்று தமிழக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சனாதன எதிர்ப்பு கூட்டத்தில் பங்கேற்று பேசிய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, "சனாதனம் எதிர்க்க வேண்டிய விஷயம் அல்ல; டெங்கு, மலேரியா போல ஒழிக்கப்பட வேண்டிய ஒரு நோய்" என கருத்து தெரிவித்தார். இவரது கருத்திற்கு ஆளும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால், தமிழ்நாட்டின் எதிர்கட்சியான அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

    இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் பேசியதாக உதயநிதி மீது உத்தர பிரதேசத்திலும், மகராஷ்டிரத்திலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    புதிய பாராளுமன்ற கட்டிடத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மே 28 அன்று திறந்து வைத்தார். நேற்று அக்கட்டிடத்தில் அதிகாரபூர்வமாக அலுவல்களை தொடங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உறுப்பினர்கள் சென்றனர். முதல் நாள் கூட்டத்தில் முதல் மசோதாவாக பெண்களுக்கு மக்களவையிலும் மாநில சட்டசபைக்களிலும் 33 சதவீத இட ஒதுக்கீடு செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த முதல் நாள் நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளராக பெண்கள் சார்பில் சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அழைக்கப்பட்டிருந்தார்.

    மதுரையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இதை விமர்சித்து உதயநிதி பேசினார்.

    அதில் அவர் கூறியதாவது:

    புதிய பாராளுமன்றக் கட்டிட திறப்பு விழாவிற்கு இந்தியாவின் ஜனாதிபதியான திரவுபதி முர்மு அழைக்கப்படவில்லை. அவர் மலைவாழ் மக்கள் சமுதாயத்தை சேர்ந்தவர். அத்துடன் கணவனை இழந்தவர். அதனால் அவரை அழைக்கவில்லை. நேற்றைய பாராளுமன்ற முதல் கூட்டத்திற்கு இந்தி நடிகையையெல்லாம் அழைத்திருக்கிறார்கள். இதுதான் சனாதனம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு உதயநிதி பேசினார்.

    புதிய கட்டிடத்தை இந்திய ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜெயா சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×