என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விபத்தில் சிக்கிய லாரிகளை காணலாம்.
திருமங்கலம் அருகே லாரிகள் நேருக்கு நேர் மோதல்- கிளீனர் உயிரிழப்பு
- திருமங்கலம் நான்கு வழிச்சாலை மற்றும் கப்பலூர், தோப்பூர் ஆகிய பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகின்றன.
- மதுரை மாவட்டம் திருமங்கலம் நான்கு வழிச்சாலை மற்றும் கப்பலூர், தோப்பூர் ஆகிய பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகின்றன.
திருமங்கலம்:
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் இருந்து ஒரு லாரி கரும்பு ஏற்றுவதற்காக இன்று அதிகாலை மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. லாரியை நெல்லை ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியம் (வயது40) என்பவர் ஓட்டி வந்தார். கிளீனராக தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் கோமதியாபுரத்தை சேர்ந்த கண்ணன் (50) என்பவரும் இருந்தார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் மேம்பாலத்தில் லாரி வந்து கொண்டிருந்தபோது பரவை மார்க்கெட்டில் இருந்து காய்கறி லோடு ஏற்றி வந்த சரக்கு லாரி எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இதில் 2 லாரிகளின் முன்பகுதியும் பலத்த சேதம் அடைந்தன.
கரும்பு ஏற்றுவதற்காக வந்த லாரியில் இருந்த கிளீனர் கண்ணன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
லாரி டிரைவர் ஆரோக்கியம், காய்கறி லோடு ஏற்றி வந்த டிரைவர் வேல்பாண்டி ஆகியோர் பலத்த காயமடைந்து லாரியின் இடிபாடுகளில் சிக்கினர். விபத்து குறித்து தகவலறிந்த திருமங்கலம் நகர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் பல மணி நேரம் போராடி இடிபாடுகளில் சிக்கியிருந்த ஆரோக்கியம், வேல்பாண்டியை மீட்டனர். பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நான்கு வழிச்சாலை மற்றும் கப்பலூர், தோப்பூர் ஆகிய பகுதிகளில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகின்றன. இதனால் உயிர்பலி ஏற்படுகிறது. எனவே விபத்து நடக்கும் பகுதிகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






