என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

நீலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்- சாலையோர வியாபாரிகள் மகிழ்ச்சி
- ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கிய ரோஜா மலர்களையும் பார்வையிட்டு, செல்போனில் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
- சுற்றுலா பயணிகள் நீலகிரியில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
ஊட்டி:
தற்போது தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நிலவக்கூடிய இதமான கால நிலையை அனுபவிக்க தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அங்குள்ள கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய மலர்களை கண்டு ரசித்தனர்.
மேலும் பூங்காவில் உள்ள பெரிய புல்தரையில் குடும்பத்துடன் அமர்ந்து பேசி மகிழ்ந்தனர். அங்குள்ள மலர் செடிகள் முன்பு புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
இதேபோல ரோஜா பூங்காவில் பூத்து குலுங்கிய ரோஜா மலர்களையும் பார்வையிட்டு, செல்போனில் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
இந்த சுற்றுலா தலம் மட்டுமின்றி தொட்டபெட்டா மலைசிகரம், படகு இல்லம், அவலாஞ்சி, பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, கொடநாடு காட்சிமுனை, லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.
இதேபோல், ஊட்டியில் உள்ள பைன் மரக்காடுகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள் உயர்ந்து நிற்கும் பைன்கள், மூச்சடைக்கக் கூடிய அழகு காட்சிகள் மற்றும் இனிமையான சூழ்நிலை ஆகியவற்றை கண்டு ரசித்தனர். மேலும் பைன் மரங்கள் நிறைந்த வனப்பகுதியில் நின்று புகைப்படமும் எடுத்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் அவர்களை நம்பி வியாபாரம் நடத்தி வரும் சாலையோர வியாபாரிகளும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக கேரட், பீட்ரூட், மக்காச்சோளம், கோஸ் மற்றும் அவிச்ச வேர்கடலை, மாங்காய் என சாலை ஓரங்களில் வியாபாரம் நடத்தி வருபர்களுக்கு வியாபாரம் களைகட்டி உள்ளது.
சுற்றுலா பயணிகள் நீலகிரியில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. கமர்சியல் சாலை, கலெக்டர் அலுவலக சாலை, பஸ் நிலையம், சேரிங்கிராஸ் மற்றும் ஊட்டி குன்னூர் சாலைகளில் 3 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதை காண முடிந்தது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.






