search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வடசென்னை பகுதிகளில் கழிவுநீர் அகற்ற ரூ.946 கோடியில் புதிய திட்டம்: பட்ஜெட்டில் தகவல்
    X

    வடசென்னை பகுதிகளில் கழிவுநீர் அகற்ற ரூ.946 கோடியில் புதிய திட்டம்: பட்ஜெட்டில் தகவல்

    • நீர்நிலை மாசுபாட்டைத் தவிர்ப்பதற்கும் 946 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய திட்டம் நிறைவேற்றப்படும்.
    • சென்னையை ஒட்டி பூந்தமல்லிக்கு அருகில் அதிநவீனத் திரைப்பட நகரம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் 2024-2025-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அறிவித்த முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:-

    நாட்டிலேயே மிக வேகமாக வளர்ந்துவரும் நகரங்களில் ஒன்றான சென்னை மாநகரத்தின் சில பகுதிகளில், குறிப்பாக, வடசென்னையில் போதிய அளவு அடிப்படை வசதிகளும் கட்டமைப்புகளும் இல்லாத நிலை உள்ளது. சென்னை மாநகரில் சமச்சீர் வளர்ச்சியை உறுதி செய்ய வடசென்னை வளர்ச்சித் திட்டம்" எனும் புதிய முயற்சியை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் வாட்டர் பேசின் சாலையில் 75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் புதிய குடியிருப்புகள். எழும்பூரில் குழந்தைகள் நல மருத்துவமனையில் 53 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய உயர்தர சிகிச்சைப்பிரிவு, ராயபுரத்தில் ஆர்.எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் 96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2 புதிய கட்டடங்கள், பெரியார் நகர் அரசு புறநகர் மருத்துவமனையில் 55 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 3 புதிய தளங்கள், 11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழிற்பயிற்சி நிலையம், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரெட்டேரி. வில்லிவாக்கம், பாடி ஏரிகளை சீரமைத்தல். 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 பள்ளிகளைப் புதுப்பித்தல், மேம்படுத்துதல் மற்றும் கணினிமயமாக்கல் போன்ற பல்வேறு வளர்ச்சிப் பணிகள் என மொத்தம் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

    சென்னை மாநகராட்சி வடசென்னை பகுதிகளில் மக்கள்தொகை மற்றும் அவற்றுக்கான பெருகிவரும் தேவைகளை நிறைவுசெய்ய சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் தற்போது செயல்படுத்தப்பட்டுள்ள கழிவுநீர் சேகரிப்புக் குழாய்கள், கழிவுநீர் இறைக்கும் நிலையங்கள், உந்து குழாய்கள் மற்றும் உபகரணங்களின் செயல்திறன் போதுமானதாக இல்லை. எனவே, வடசென்னைப் பகுதிகளில் கழிவுநீர் மற்றும் குடிநீர் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்டு கழிவுநீரைத் திறம்பட அகற்றுவதற்கும், நீர்நிலை மாசுபாட்டைத் தவிர்ப்பதற்கும் 946 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒரு புதிய திட்டம் நிறைவேற்றப்படும்.

    சென்னையை ஒட்டி பூந்தமல்லிக்கு அருகில் அதிநவீனத் திரைப்பட நகரம் ஒன்று உருவாக்கப்பட உள்ளது. சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தக் கனவுத் தொழிற்சாலையில் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய படப்பிடிப்புத் தளங்கள், படத் தயாரிப்புக்குப் பிந்தைய பதவிகளுக்கான கட்டமைப்புகள், படப்பிடிப்பிற்குத் தேவையான கட்டமைப்புகள், அரசு தனியார் பங்களிப்புடன் அமைக்கப்படும்.

    இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×