search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேலைக்கு சென்ற போது மாயம்: வடமாநிலத்தில் சுற்றித் திரிந்த ஆண்டிபட்டி சிறுவர்களை மீட்ட போலீசார்
    X

    மீட்கப்பட்ட சிறுவர்களுடன் போலீசார்.

    வேலைக்கு சென்ற போது மாயம்: வடமாநிலத்தில் சுற்றித் திரிந்த ஆண்டிபட்டி சிறுவர்களை மீட்ட போலீசார்

    • கடந்த 15 நாட்களாக மத்திய பிரதேசம் மாநிலத்திற்கு வேலைக்கு சென்ற சிறுவர்கள் 3 பேர்களும் அவர்களது பெற்றோர்களிடம் தொலைபேசியில் பேசவில்லை.
    • போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு 3 சிறுவர்களும் எங்கே இருக்கிறார்கள் என்று பல்வேறு கோணங்களில் அங்குள்ள போலீசார் உதவியுடன் தேடினர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே ராஜக்காள் பட்டி ஊராட்சியில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கதிர்வேல்புரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட மலைவாழ் பளியர்இன குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களான சீனி மகன் பட்டவராயன் (வயது 16), வேல்முருகன் மகன் ஞானவேல் (15), ரவி மகன் தமிழரசன் (14) ஆகிய 3 சிறுவர்களையும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த 2 பேர் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் பகுதிக்கு இட்லி கடைக்கு வேலைக்கு செல்வதாக கூறி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அழைத்து சென்றுள்ளனர்.

    அவர்களது பெற்றோர்களிடம் சிறுவர்கள் தொடர்ந்து தொலைபேசி மூலம் பேசி வந்தனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களாக மத்திய பிரதேசம் மாநிலத்திற்கு வேலைக்கு சென்ற சிறுவர்கள் 3 பேர்களும் அவர்களது பெற்றோர்களிடம் தொலைபேசியில் பேசவில்லை.

    இதையடுத்து வேலைக்காக அழைத்துச் சென்ற உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவர்களை பெற்றோர்கள் தொடர்பு கொள்ள முயன்றும் முடியாததால் ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில், ராஜதானி இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா, சப்-இன்ஸ்பெக்டர் முஜிபுர்ரஹ்மான், தலைமைக்காவலர் தங்கப்பாண்டி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சிறுவர்களை மீட்க மத்திய பிரதேசத்திற்கு விரைந்தனர்.

    போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு 3 சிறுவர்களும் எங்கே இருக்கிறார்கள் என்று பல்வேறு கோணங்களில் அங்குள்ள போலீசார் உதவியுடன் தேடினர். இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்திலிருந்து 340 கி.மீ. தூரத்தில் சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் 3 சிறுவர்களும் இருப்பதாக தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்று மீட்டனர். இதையடுத்து ஆண்டிபட்டி கோர்ட்டில் குழந்தைகளை ஆஜர்படுத்தி அதன் பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர்.

    போலீசார் மாயமான சிறுவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் தங்களுக்கு படிப்பு அறிவு இல்லை என்றும், இட்லி கடை வேலைக்காக சென்று அங்கு வேலை பிடிக்காமல் தாங்களாகவே வெளியேறி சென்றதாகவும்,

    பின்னர் ஆழ்துளை கிணறு தோண்டும் பணிக்காக லாரியுடன் வந்த தமிழ்நாடு தொழிலாளர்களுடன் சேர்ந்து இடம் பெயர்ந்ததும் தெரிய வந்தது. 3 சிறுவர்களையும் விைரந்து மீட்ட போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.

    Next Story
    ×