search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரசு பஸ்சை நடுரோட்டில் தடுத்து நிறுத்தி டிரைவர்-கண்டக்டரை தாக்கிய கும்பல்
    X

    அரசு பஸ்சை நடுரோட்டில் தடுத்து நிறுத்தி டிரைவர்-கண்டக்டரை தாக்கிய கும்பல்

    • பஸ்சில் வந்த 2 வாலிபர்களும், தனது நண்பர்கள் சிலருக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தனர்.
    • பஸ்சுக்குள் புகுந்து டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இருந்து நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஒரு அரசு பஸ் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடிக்கு சென்றது.

    பஸ்சை டிரைவர் சனல்குமார் இயக்கினார். கண்டக்டராக தனசேகரன் இருந்தார். அந்த பஸ் இரவில் தூத்துக்குடியை சென்றடைந்தது. பின்னர் அங்கிருந்து இரவு 9.30 மணிக்கு பஸ் நாகர்கோவிலுக்கு புறப்பட்டது. பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அப்போது பஸ்சில் 2 வாலிபர்கள் ஏறினார்கள். அவர்கள் இருவரும் பஸ்சின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தனர். இருவரையும் பஸ்சுக்குள் வருமாறு கண்டக்டர் தனசேகரன் கூறினார்.

    ஆனால் அவர்கள் இருவரும் பஸ்சுக்குள் வருவதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால் அந்த வாலிபர்களுக்கும், கண்டக்டருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இது பற்றி பஸ்சில் வந்த 2 வாலிபர்களும், தனது நண்பர்கள் சிலருக்கு போன் மூலமாக தகவல் தெரிவித்தனர்.

    புதுக்கோட்டை பகுதியில் அந்த பஸ் வந்தபோது வாலிபர்கள் சிலர் மோட்டார் சைக்கிளில் வந்து வழி மறித்தனர். இதையடுத்து பஸ்சை டிரைவர் நிறுத்தினார். பின்னர் அந்த வாலிபர்கள் பஸ்சுக்குள் புகுந்து டிரைவர், கண்டக்டர் இருவரையும் சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் பஸ்சின் கண்ணாடியையும் கல்வீசி உடைத்தனர்.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலறி அடித்தபடி கீழே இறங்கினார்கள். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்டது குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    படுகாயம் அடைந்த டிரைவர் சனல்குமார், கண்டக்டர் தனசேகரன் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் பஸ்சில் இருந்த பயணிகளை போலீசார் மாற்று பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இது குறித்து டிரைவர் சனல்குமார் தூத்துக்குடி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஓடும் பஸ்சுக்குள் புகுந்து டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை கைப்பற்றி விசாரணை நடக்கிறது.

    டிரைவர், கண்டக்டரை தாக்கிய வாலிபர்கள் முகம் வீடியோவில் தெளிவாக பதிவாகி உள்ளது. இதையடுத்து அந்த வாலிபர்கள் யார்? என்பதை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், வாலிபர்கள் குடிபோதையில் டிரைவர், கண்டக்டரை தாக்கி இருப்பது தெரிய வந்துள்ளது. வாலிபர்களை கைது செய்ய தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. பஸ்சுக்குள் புகுந்து டிரைவர், கண்டக்டர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×