search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கி.வீரமணிக்கு தகைசால் தமிழர் விருது: சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் வழங்குகிறார்
    X

    கி.வீரமணிக்கு 'தகைசால் தமிழர்' விருது: சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் வழங்குகிறார்

    • “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருது 2021-ம் ஆண்டு முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது.
    • விருது வருகிற 15-ந் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும்.

    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் "தகைசால் தமிழர்" என்ற பெயரில் புதிய விருது 2021-ம் ஆண்டு முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆணைக்கிணங்க வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டிற்கான விருதாளரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, 'சமூகப் பாகுபாட்டுக்கு ஆளான மக்களுக்கு' ஆதரவாக தந்தை பெரியார் நடத்திய சமூகப் பிரச்சாரங்கள் மற்றும் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்த வரும், 1962-ல் விடுதலை நாளிதழ் ஆசிரியராக பொறுப்பேற்று, தொடர்ந்து 60 ஆண்டுகளையும் கடந்து மிகச் சிறப்பாக பணி செய்து வருபவரும், உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேடினாலிஸ்ட் (ஆங்கிலம்) இதழ்களுக்கு ஆசிரியராகவும், இணைய தளங்கள் வாயிலாகவும் மேற்கண்ட கருத்துக்களைப் பரப்பி பன்னாட்டுத் தமிழர்களையும் ஒருங்கிணைத்து பெரியாரின் பணியைத் தொடர்ந்து வருபவரும், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய தமிழரும், திராவிடர் கழகத் தலைவருமான கி. வீரமணிக்கு 2023-ம் ஆண்டிற்கான "தகைசால் தமிழர் விருது" வழங்க தேர்வுக் குழுவினரால் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

    "தகைசால் தமிழர்" விருதிற்குத்தேர்ந்தெடுக்கப்பட்ட கி. வீரமணிக்கு, பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற 15-ந் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×