search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் பதட்டமான வாக்குச்சாவடிகள் கணக்கெடுப்பு
    X

    சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் பதட்டமான வாக்குச்சாவடிகள் கணக்கெடுப்பு

    • வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார் படுத்தப்பட்டு வருகிறது.
    • கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது 3 எம்.பி. தொகுதிகளிலும் 59 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தன.

    சென்னை:

    சென்னை மாவட்டத்தில் வடசென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய 3 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.

    இந்த 3 தொகுதிகளிலும் 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

    இவர்கள் வாக்கு அளிப்பதற்காக 3 பாராளுமன்ற தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 676 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளை எந்தெந்த பள்ளிகளில் மற்றும் சமூக நலக்கூடங்களில் அமைப்பது என்பது பற்றி பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.

    அதுபோல இந்த வாக்குச் சாவடிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களும் தயார் படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 5 தேர்தல் பணியாளர்கள் பணியாற்றுவார்கள். அவர்களுக்கு விரைவில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    சென்னை மாவட்டத்தில் அமைக்கப்படும் 4 ஆயிரத்து 676 வாக்குச்சாவடிகளையும் சென்னை மாநகர போலீசார் 3 பிரிவுகளாக பிரித்து ஆய்வு செய்து வருகிறார்கள். சுமூகமாக வாக்குப்பதிவு நடக்கும் வாக்குச்சாவடிகள், பதட்டமான வாக்குச் சாவடிகள், மிக பதட்டமான வாக்குச்சாவடிகள் என்று 3 பிரிவாக பிரிக்கப்பட்டு உள்ளன.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் போலீசார் நடத்திய ஆய்வில் 330 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என்று கண்டுபிடிக்கப்பட்டன. 157 வாக்குச் சாவடிகள் மிக மிக பதட்டமானவை என்று கண்டு பிடிக்கப்பட்டன. அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

    இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்த போது சென்னை மாவட்டத்தில் பதட்டமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 550 ஆக உயர்ந்தது. என்றாலும் மிக பதட்டமான வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை சற்று குறைந்து இருந்தது.

    இது தொடர்பாக தற்போது சென்னை மாநகர போலீசார் தீவிர கணக்கெடுப்பு மற்றும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். 3 தொகுதிகளிலும் எந்தெந்த வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்று பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பதட்டமான, மிக பதட்டமான வாக்குச்சாவடிகள் எவை என்பது தெரியவரும்.

    அந்த வாக்குச்சாவடிகளில் கூடுதலாக ஒரு அடுக்கு பாதுகாப்பு செய்ய சென்னை மாநகர போலீசார் திட்டமிட்டுள்ளனர். போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது 3 எம்.பி. தொகுதிகளிலும் 59 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தன. சட்டசபை தேர்தலின் போது வாக்குப்பதிவு எண்ணிக்கை சற்று அதிகரித்து இருந்தது.

    இந்த தடவை வாக்கு பதிவை 70 சதவீதமாக அதிகரிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

    Next Story
    ×