search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ் மொழிப் பற்றை போராட்டங்களால் வெளிப்படுத்திய விஜயகாந்த்
    X

    தமிழ் மொழிப் பற்றை போராட்டங்களால் வெளிப்படுத்திய விஜயகாந்த்

    • ரசிகர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பும் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.
    • 2001-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் சுயேட்சையாகப் போட்டியிட்டு, பலர் வெற்றியும் அடைந்தனர்.

    1965-ம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தனது சிறு வயதிலேயே விஜயகாந்த் பங்கேற்றுள்ளார். 1984-ம் ஆண்டு ஈழத்தமிழர்கள் மீதான படுகொலையைக் கண்டித்து சக நடிகர், நடிகைகளுடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தி, படுகொலையை நிறுத்தவும், நீதி வேண்டியும் தமிழக கவர்னரிடம் மனு அளித்தார். 1986-ம் ஆண்டு அதே காரணங்களுக்காக சென்னை வட்டாட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தார். அவரின் ரசிகர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதுமுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பும் ஈழத்தமிழர்களுக்காக உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.


    தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காகக் குரல்கொடுத்தும், 1989 ஆம் ஆண்டுகளில் மண்டபம் உள்ளிட்ட முகாம்களில் அகதிகளாக வசிப்பவர்களுக்கு உதவிபுரிந்தும் வந்தார். ஈழத்தமிழர்கள் உணர்வை உணர்ந்தவராக, "ஈழத்தமிழர்கள் அழும் போது, என்னால் கொண்டாட்டத்தில் இருக்க முடியாது" என்று கூறி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்தார். அதன்பிறகு தான் அவரின் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. தனது 100-வது படத்துக்கு 'கேப்டன் பிரபாகரன்' எனவும், தனது மூத்த மகனுக்கு 'விஜய பிரபாகரன்' எனவும் பெயர்வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீதும், ஈழத்தின் மீதும் தனக்கிருந்த பற்றைப் பறைசாற்றினார்.

    'தென்னிந்திய, அகில இந்திய' என்றிருந்த தனது ரசிகர் மன்றத்தின் பெயரை 1982-ல் 'தமிழ்நாடு விஜயகாந்த் தலைமை ரசிகர் மன்றம்' எனவும் பெயர் மாற்றம் செய்தார். 2000-ம் ஆண்டு, பிப்ரவரி 12-ந்தேதி தனது ரசிகர் மன்றத்துக்கென தனிக்கொடியை அறிமுகப்படுத்தினார். அதைத்தொடர்ந்து, 2001-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பல்வேறு இடங்களில் சுயேட்சையாகப் போட்டியிட்டு, பலர் வெற்றியும் அடைந்தனர்.

    2002-ல் 'ராஜ்ஜியம்' படத்திலிருந்து அரசியல் குறித்த வசனங்கள் அவரின் படங்களில் பட்டாசாக வெடிக்கத் தொடங்கின.

    2002-ம் ஆண்டு காவிரி நதிநீர் பிரச்சனை உச்சத்தில் இருந்தபோது, அனைத்து நடிகர்களையும் ஒன்றிணைத்து 'நீர் தராத கர்நாடாகாவுக்கு மின்சாரம் இல்லை' என்கிற முழக்கத்துடன் மாபெரும் போராட்டத்தை நெய்வேலியில் நடத்தினார்.

    Next Story
    ×