search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மூச்சு விடுவதற்கு கடுமையாக சிரமப்படும் விஜயகாந்த்... மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்
    X

    மூச்சு விடுவதற்கு கடுமையாக சிரமப்படும் விஜயகாந்த்... மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்

    • தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
    • ‘பை பாஸ்’ என்று அழைக்கப்படும் ஆக்சிஜனை செயற்கையாக செலுத்தும் சிகிச்சை விஜயகாந்த்துக்கு அளிக்கப்பட்டு வருவதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார்.

    குரல் வளையில் பாதிப்பு ஏற்பட்டு பேசுவதற்கு சிரமப்பட்டு வரும் விஜயகாந்தால் எழுந்து நிற்கவும் முடியாது. இதனால் தனது பிறந்த நாட்களின்போது தே.மு.தி.க. அலுவலகத்தில் சேரில் அமர்ந்தபடியே ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

    வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் விஜயகாந்தின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாமலேயே உள்ளது.

    இந்த நிலையில் விஜயகாந்த்தின் உடல்நிலையில் கடந்த 18-ந்தேதி பின்னடைவு ஏற்பட்டது. மூச்சு விடுவதற்கு அவர் சிரமப்பட்டார். கடுமையான இருமல் மற்றும் சளித்தொல்லையும் ஏற்பட்டிருந்தது.

    இதையடுத்து நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்துக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதையடுத்து அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

    இதுதொடர்பாக கடந்த 23-ந்தேதி மியாட் ஆஸ்பத்திரி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் விஜயகாந்த்தின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் விஜயகாந்த் விரைவில் வீடு திரும்பிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் விஜயகாந்த்தின் உடல்நிலை சீராக இல்லை என்று மியாட் ஆஸ்பத்திரி சார்பில் நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக மியாட் ஆஸ்பத்திரி நிர்வாக இயக்குனரான பிரித்வி மோகன் தாஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விஜயகாந்த்துக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுவதால் மேலும் 14 நாட்கள் தொடர் சிகிச்சை தேவை என்று குறிப்பிட்டு உள்ளார்.

    இது கட்சியினர் மத்தியிலும், விஜயகாந்த் குடும்பத்தினரிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜயகாந்த்தின் நெஞ்சு பகுதியில் சளி அதிகமாக சேர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் மூச்சு விடுவதற்கு கடுமையாக சிரமப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதற்காகவே விஜயகாந்த்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 'பை பாஸ்' என்று அழைக்கப்படும் ஆக்சிஜனை செயற்கையாக செலுத்தும் சிகிச்சை விஜயகாந்த்துக்கு அளிக்கப்பட்டு வருவதாக ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.

    நுரையீரலில் சேர்ந்துள்ள சளியை முழுமையாக அகற்றி விஜயகாந்த்துக்கு ஏற்பட்டுள்ள சுவாச பிரச்சனையை சரி செய்ய டாக்டர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். 2 வாரங்கள் வரையில் விஜயகாந்த்துக்கு இது தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

    Next Story
    ×