search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சட்டசபை நாளை காலை கூடுகிறது: கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் தாக்கலாகிறது
    X

    சட்டசபை நாளை காலை கூடுகிறது: கவர்னர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்கள் தாக்கலாகிறது

    • தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தற்போது கவர்னரிடம் உள்ளது.
    • 10 மசோதாக்களும் தாக்கல் செய்து முடித்ததும் ஒவ்வொரு மசோதாவும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. தமிழக அரசு அனுப்பும் கோப்புகளுக்கு கவர்னர் அலுவலகத்தில் எளிதாக ஒப்புதல் கிடைத்து விடுவதில்லை.

    அதேபோல் தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாக்களுக்கும் அவர் உடனே ஒப்புதல் அளித்து விடுவதில்லை. அந்த வகையில் 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்கவில்லை.

    இதனால் தமிழக அரசு சார்பில் கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் கவர்னரின் நடவடிக்கைகளுக்கு சுப்ரீம் கோர்ட்டும் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

    சுப்ரீம் கோர்ட்டில் அடுத்த கட்ட விசாரணை 20-ந்தேதி வருகிறது.

    இந்த நிலையில் சட்டசபையில் ஏற்கனவே தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பி இருந்த 10 சட்ட மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று அரசுக்கே திருப்பி அனுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தற்போது கவர்னரிடம் உள்ளது. அதை தமிழக அரசுக்கு மாற்றும் வகையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தது. அது தொடர்பான மசோதாக்களை ஏற்றுக்கொள்ளாமல் கவர்னர் திருப்பி அனுப்பி உள்ளார்.

    மேலும் தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தொடங்குவது தொடர்பான சட்ட மசோதாவில் மாணவர் சேர்க்கை எவ்வாறு நடைபெறும் என்று கேள்வி எழுப்பியும் அதையும் அரசுக்கு திருப்பி அனுப்பி உள்ளார்.

    இதையறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த 10 சட்ட மசோதாக்களை மீண்டும் 2-வது முறையாக சட்டசபையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார்.

    இதற்காக சட்டசபையை நாளை கூட்டுமாறு சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார். அதன் பேரில் சட்டசபை நாளை காலை 10 மணிக்கு கூடும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    சட்டசபை நாளை காலை 10 மணிக்கு கூடியதும் சபாநாயகர் அப்பாவு சபை நடவடிக்கைகளை தொடங்கி வைத்து நிகழ்ச்சி நிரலை எடுத்து சொல்வார்.

    அதைத் தொடர்ந்து நிகழ்ச்சி நிரல் அட்டவணையில் இடம் பெற்றுள்ள சட்ட மசோதாக்களை ஒவ்வொன்றாக தாக்கல் செய்யுமாறு அமைச்சர்களை கேட்டுக்கொள்வார்.

    அதன்படி சட்ட மசோதாக்களை தாக்கல் செய்ய அமைச்சர்கள் அனுமதி கோருவார்கள். இதற்கு எம்.எல்.ஏ.க்கள் குரல் மூலம் 'ஆம்' என்று சொன்ன பிறகு சட்ட மசோதா தாக்கல் செய்யப்படும்.

    அப்போது அந்த மசோதா மீது யாரேனும் எதிர்ப்பு தெரிவிப்பதாக இருந்தால் ஆரம்ப கட்டத்திலேயே அதை எதிர்ப்பதாக பதிவு செய்வார்கள்.

    இப்படி 10 மசோதாக்களும் தாக்கல் செய்து முடித்ததும் ஒவ்வொரு மசோதாவும் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

    அப்போது மசோதாக்களில் ஏதாவது திருத்தம் வேண்டும் என்று விருப்பப்பட்டால் எம்.எல்.ஏ.க்கள் அது குறித்து தங்களது கருத்துக்களை முன் வைப்பார்கள். அதற்கு அமைச்சர்கள் விளக்கம் அளித்து மசோதாவை நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொள்வார்கள்.

    இதைத் தொடர்ந்து ஒவ்வொரு மசோதாவையும் சபாநாயகர் அப்பாவு மெஜாரிட்டி அடிப்படையில் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்ற கோருவார். அதன்படி மசோதாக்கள் நிறைவேற்றப்படும்.

    சட்டசபையில் நாளை நிறைவேற்றப்படும் 10 மசோதாக்களும் சட்டசபை கூட்டம் முடிந்ததும் சட்டசபை செயலகம் மூலம் தமிழக அரசின் சட்டத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து கவர்னர் மாளிகைக்கு உடனே அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    நாளை நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் சுற்றறிக்கையுடன் நிகழ்ச்சி நிரலும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×