search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது
    X

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை நாளை கூடுகிறது

    • அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது.
    • அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்க உள்ளார்.

    சென்னை:

    தமிழக சட்டசபை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது.

    கூட்டம் தொடங்கியதும், மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவுக்கும், உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி முலாயம்சிங் யாதவ் மறைவுக்கும் அனுதாபம் தெரிவிக்கும் வகையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். கோவைத்தங்கம் உள்ளிட்ட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மறைவு குறித்தும் இரங்கல் தெரிவிக்கப்படும்.

    அதன்பிறகு சட்டசபையின் அன்றைய நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படும். இதன் பிறகு 11 மணி அளவில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும்.

    இந்த கூட்டத்தில் சட்டசபை எத்தனை நாட்கள் நடத்துவது என்று முடிவு செய்யப்படும். அனேகமாக 3 நாட்கள் சட்டசபை கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    நாளை துவங்கும் சட்டசபை கூட்டத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு சபாநாயகருடன் வாக்குவாதம் செய்து சட்டசபையை புறக்கணிக்க கூடும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    காரணம், அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரத்தால் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இப்போது சட்டசபையிலும் எதிரொலிக்க உள்ளது. அ.தி.மு.க.வில் இருவரும் ஒருவரை ஒருவர் கட்சியில் இருந்து நீக்கிக் கொண்டதோடு இதுகுறித்து சபாநாயகருக்கும் கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.

    எடப்பாடி பழனிசாமி கொடுத்த கடிதத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கி விட்டதாகவும் அதற்கு பதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை எதிர்கட்சி துணைத்தலைவராக தேர்ந்தெடுத்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

    அந்த வகையில் சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்த இடத்தை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க வேண்டும் என்றும், அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற முறையில் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்க தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கடிதம் கொடுத்து உள்ளனர். ஆனால், இதற்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

    அதுமட்டுமின்றி சட்டசபை நிகழ்வுகளில் கட்சி சார்பில் முடிவெடுக்கும் போது தன்னை கலந்து பேசிதான் முடிவெடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சபாநாயகருக்கு ஏற்கனவே கடிதம் கொடுத்துள்ளார். தான் இன்னும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக நீடிப்பதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் விவகாரத்தில் சபாநாயகர் என்ன முடிவெடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை மாற்றி அமைக்கப்படுமா? ஆர்.பி.உதயகுமாரை சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவராக சபாநாயகர் அங்கீகரிப்பாரா? என்பது நாளை தெரியவரும்.

    ஒருவேளை ஓ.பன்னீர்செல்வத்தின் இருக்கையை மாற்றி அமைக்காவிட்டால் அதற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து சட்டசபையை புறக்கணித்து விடுவார்கள் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    சட்டசபையை பொறுத்தவரை சபாநாயகர் எடுக்கும் முடிவு தான் இறுதியானது. ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் ஜனநாயக முறைப்படி நியாயமான முடிவினை எடுப்பேன் என்று சபாநாயகர் ஏற்கனவே கூறி உள்ளார்.

    தற்போது வரை சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் தான் ஓ.பன்னீர் செல்வத்தின் இருக்கை உள்ளது. இன்னும் அந்த இருக்கை மாற்றி அமைக்கப்படவில்லை. சபாநாயகர் இதுபற்றி எந்த தகவலும் வெளியிடவில்லை.

    அப்படிப்பட்ட சூழலில் ஓ.பன்னீர் செல்வத்தின் அருகே சென்று எடப்பாடி பழனிசாமி அமருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளதால் சட்டசபையில் இது பற்றி சபாநாயகரிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அப்போது சபாநாயகர் தான் எடுத்துள்ள முடிவை விளக்கமாக சட்டசபையில் அறிவிப்பார்.

    இதை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஏற்றுக்கொள்வார்களா? அல்லது சட்டசபையை புறக்கணிப்பார்களா? என்பது நாளை தெரிந்துவிடும்.

    இதற்காக, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு தலைமை கழகத்தில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவுரை வழங்க உள்ளார்.

    ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியில் இருந்து சபாநாயகர் மாற்றாமல், இருக்கையையும் மாற்றி அமைக்காத பட்சத்தில் சபாநாயகர் முடிவை கண்டித்து சட்டசபையை புறக்கணிக்கவும் இன்றைய அ.தி.மு.க. கூட்டத்தில் முடிவெடுப்பார்கள் என தெரிகிறது.

    Next Story
    ×