search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்து மீள முடியாமல் தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்
    X

    வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்து மீள முடியாமல் தவிக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்

    • ஆயிரக்கணக்கானோர் வீடுகள், உடமைகளை இழந்து முகாம்களுக்கு சென்றனர்.
    • 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பானைகள், 1000 அடுப்புகளை தயாரித்து வைத்திருத்தோம்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த பெருமழை பல்லாயிரக்கணக்கான பொது மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது.

    தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல இடங்களில் குளங்கள், வாய்க்கால்களில் உடைப்பு ஏற்பட்டு தூத்துக்குடி நகரம் மட்டுமின்றி ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், தென்திருப்பேரை, ஏரல், ஆறுமுகநேரி, ஆத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் சாலை துண்டிக்கப்பட்டு தனித்தீவுகளாக மாறின.

    இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் வீடுகள், உடமைகளை இழந்து முகாம்களுக்கு சென்றனர்.

    இந்நிலையில், வெள்ளம் வடிந்தாலும் தங்கள் வாழ்வாரத்தை பெருமழை அழித்து சென்று விட்டதால், பாதிப்பில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் கவலை அடைந்துள்ளனர்.

    ஆழ்வார்திருநகரி கண்டி குளம் பகுதியில் 40 குடும்பங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 5 தலைமுறையாக மண்பாண்ட தொழில் செய்து வருகிறார்கள்.

    நவதிருப்பதி கோவில்களுக்கு கலயம், கும்பகலசம் செய்வது உள்ளிட்ட மண்பாண்ட பொருட்கள் செய்து கொடுத்து வரும் இவர்கள் தயாரிக்கும் மண்பானைகள், மண்அடுப்புகள் மாவட்டம் முழுவதும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும்.


    தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கடந்த சில வாரங்களாகவே ஆயிரக்கணக்கான மண்பானைகள், அடுப்புகள் தயார் செய்து வைத்திருந்தனர்.

    இந்நிலையில் தான் எதிர் பாராதவகையில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த பேய்மழை இவர்களின் வீடுகளை மூழ்கடித்தது. மேலும் பொங்கல் பண்டிகைக்காக தயார் செய்து வைத்திருந்த ஆயிரக்கணக்கான மண்பானை, அடுப்புகள் என அனைத்தையும் சேதப்படுத்தி விட்டன.

    உயிர் பிழைத்தால் போதும் என கருதி குழந்தைகளுடன் நிவாரண முகாம்களுக்கு சென்ற இவர்கள் தற்போது வெள்ளம் வடிந்தாலும் வாழ்வாதாரமின்றி தவிக்கின்றனர்.

    இதுகுறித்து தொழிலாளி மாயாண்டி கூறியதாவது:-

    நாங்கள் 5 தலைமுறைகளாக இந்த தொழில் செய்து வருகிறோம். ஆழ்வார்திரு நகரியில் 40 குடும்பங்கள், தென்திருப்பேரையில் 25 குடும்பங்கள், ஸ்ரீவைகுண்டத்தில் 10 குடும்பங்கள் நாங்கள் அனைவருமே மண்பாண்ட தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்து அணுமதி பெற்று குளங்களில் இருந்து மண் எடுத்து மண்பானை, மண் அடுப்பு செய்து வருகிறோம்.

    நவதிருப்பதி கோவில்களுக்கு கலயம், கும்பகலசம் செய்து கொடுக்கிறோம். மேலும் திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் நடைபெறும் பொங்காலை திருவிழாவுக்கான பானைகள் செய்து கொடுப்போம்.

    ஆனாலும் பொங்கல் பண்டிகை காலம் தான் எங்களுக்கு வருமானம் கிடைக்கும் காலம். பொது மக்கள் மண்அடுப்புகளை வைத்து, பானைகளில் பொங்கலிடுவார்கள் என்பதால் அதற்காக 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பானைகள், 1000 அடுப்புகளை தயாரித்து வைத்திருத்தோம்.

    மேலும் வழக்கமான மீன் சட்டிகளும் செய்து வைத்திருந்தோம். ஆனால் விடாமல் கொட்டித் தீர்த்த மழையால் ஆறு மட்டுமின்றி குளத்திலும் உடைப்பு ஏற்பட்டு, திடீரென நள்ளிரவில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் உயிரை காப்பாற்றிக் கொள்ள குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஓடினோம்.

    சில மணி நேரத்திற்குள் வீடுகளை மூழ்கடித்த வெள்ளத்தில் நாங்கள் செய்து வைத்திருந்த அனைத்து பானைகள், அடுப்புகள் உடைந்து சேதம் ஆனது. மேலும் நவநாகரீக காலத்திற்கு ஏற்ப மண்பானைகள் செய்வதற்காக வாங்கி வைத்திருந்த 6 எந்திரங்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாகி விட்டது.

    இதேபோல பிப்ரவரி மாதம் திருவனந்தபுரத்தில் நடைபெறும் பொங்காலை திருவிழாவுக்கு பானைகள் செய்வதற்காக மண்லோடு அடித்து வைத்திருந்தோம். 5 டன் விறகு வாங்கி வைத்திருந்தோம். அனைத்தும் நாசமாகி விட்டது. ஒரேநாளில் ரூ.8 லட்சத்திற்கும் மேல் இழப்பை சந்தித்துள்ளதால் இதில் இருந்து எப்படி மீளப் போகிறோம் என்றே தெரியவில்லை.

    பொங்கல் காலத்தில் கிடைக்கும் வருமானம் தான் எங்கள் குடும்பங்களுக்கு 6 மாத செலவுக்கு வசதியாக இருக்கும். தற்போது அது கிடைக்காமல் போனதோடு, அடுத்த 3 மாதத்திற்கு தொழில் செய்ய முடியாத அளவுக்கு அனைத்து மூலப் பொருட்களையும் இழந்து விட்டோம். அரசு தான் எங்களுக்கு உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கத்தின் நெல்லை மாவட்ட செயலாளர் அய்யப்பன் கூறியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் அருகன்குளம், மேலப்பாளையம் குறிச்சி, வண்ணார்பேட்டை, வீரவநல்லூர், கொழுமடை, களக்காடு, ராதாபுரம் தாலுகாவில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுதவிர கூனியூர் காருக்குறிச்சி பகுதியில் கூட்டுறவு சங்கத்தின் மூலமாக அதிக அளவு மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம், ஆழ்திருநகரி, செய்துங்கநல்லூர், ஏரல், வாழவல்லான் உள்ளிட்ட பகுதிகளில் மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. விரைவில் பொங்கல் பண்டிகை வர உள்ள நிலையில், அதற்காக மண்பாண்டங்கள் உற்பத்தி பணியில் தொழிலாளர்களாகிய நாங்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் வெளி மாவட்டங்கள் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்களுக்கும் மண்பாண்டங்களை ஏற்றுமதி செய்வோம்.

    இந்த ஆண்டு பொங்கலுக்காக பானைகள் தயாரிக்க தேவையான மண், விறகு, அடுப்பு, எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருந்தோம். ஆனால் கடந்த 17 மற்றும் 18-ந்தேதிகளில் பெய்த பெருமழை வெள்ளத்தால் கூனியூரில் மழை வெள்ளம் புகுந்துவிட்டது. மேலப்பாளையம் குறிச்சியில் மண்பாண்டங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு விட்டது. இதுதவிர மண், விறகு உள்ளிட்டவையும் அடித்து செல்லப்பட்டது. இதனால் மீளா துயரில் நாங்கள் கண்ணீர் வடித்து வருகிறோம்.

    நெல்லை மாவட்டத்தில் ரூ.70 முதல் ரூ.80 லட்சம் வரை வெள்ளத்தால் எங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.1½ கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது எங்களால் இந்த மழையால் ஏற்பட்ட நிவாரணத்தை கூட சரிசெய்ய முடியவில்லை. இந்த மழை வெள்ளத்தால் நெல்லையில் 6 ஆயிரம் தொழிலாளர்களும், தென்காசியில் 4 ஆயிரம் மற்றும் தூத்துக்குடியில் 7 ஆயிரம் தொழிலாளர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறது.

    எனவே எங்களுக்கு பொங்கல் நிவாரணமாக அரசு ஒரு குடும்பத்திற்கு ரூ.50 முதல் ரூ.1 லட்சம் வரை வழங்க வேண்டும். வெள்ளத்தால் நாங்கள் தயாரிப்பு உபகரணங்கள் மற்றும் எந்திரங்களை இழந்துவிட்டோம். எனவே ஒவ்வொரு குடும்பத்திற்கும் மண்பாண்ட சக்கரம் உள்ளிட்ட எந்திரங்களை இலவசமாக வழங்க வேண்டும். இந்த ஆண்டுக்கான மழை கால நிவாரணம் இதுவரை வழங்கவில்லை. எனவே உடனடியாக ரூ.5 ஆயிரம் மழை கால நிவாரணத்தை வழங்கவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×