search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ராமேசுவரம் மீனவர்களை இரும்புக்கம்பியால் தாக்கி விரட்டியடித்த இலங்கை கடற்படை
    X

    ராமேசுவரம் மீனவர்களை இரும்புக்கம்பியால் தாக்கி விரட்டியடித்த இலங்கை கடற்படை

    • இலங்கை கடற்படையினர் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த 2 மீனவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    • கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுவதால் எங்களுக்கு பல ஆயிரம் ரூபாய் இழப்பீடு ஏற்படுகிறது என மீனவர்கள் தெரிவித்தனர்.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதல்களும், விசைப்படகுகளுடன் மீனவர்கள் சிறைப்பிடிப்பு சம்பவங்களும் தொடர்ந்து அரங்கேறித்தான் வருகிறது. மீனவர்களின் பிரச்சனைக்கு கச்சத்தீவை மீட்பதே தீர்வாகும் என்ற ஒற்றை வாசகம் இந்த பாராளுமன்ற தேர்தலில் ஓங்கி ஒலித்து வருகிறது.

    இதற்கிடையே எல்லை தாண்டி வந்ததாக குறிப்பாக ராமேசுவரம் மீனவர்கள் மாதத்தில் 20-க்கும் அதிகமானோர் சிறைபிடிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகி விட்டது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போதெல்லாம் மீனவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம், உண்ணாவிரதம் இருந்தபோதிலும் நிரந்தர தீர்வு எட்டப்படாமலேயே உள்ளது.

    இந்தநிலையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று காலை 338 விசைப்படகுகளில் மீன்பிடி அனுமதிசீட்டு பெற்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நள்ளிரவில் அவர்கள் இந்திய கடல் எல்லையில் கச்சத்தீவு, நெடுந்தீவுக்கு இடையே வலைகளை விரித்து மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு 5 குட்டி ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் அந்த பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தாக்கி விரட்டியடித்தனர். மேலும் மீனவர்கள் கடலில் விரித்திருந்த வலைகளையும் அறுத்து சேதப்படுத்தினர். இதனால் உயிருக்கு பயந்த மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டனர்.

    ஆனாலும் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர் மெக்கானிக் (வயது 34) என்பவரை தண்ணீர் பைப்பை கொண்டு இலங்கை கடற்படையினர் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு இடது கை மற்றும் முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதே போல் ராமேசுவரம் மீனவர் தங்கம் (55) என்பவரையும் கம்பு மற்றும் கம்பியால் தாக்கியதில் அவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே படகில் இருந்த மீனவர்கள் பாதியில் இன்று அதிகாலை கரை திரும்பினர். கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுவதால் எங்களுக்கு பல ஆயிரம் ரூபாய் இழப்பீடு ஏற்படுகிறது என மீனவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் இலங்கை கடற்படையினர் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த 2 மீனவர்களும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×