search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் 10 நாட்களுக்கு சிறப்பு சந்தை
    X

    கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று முதல் 10 நாட்களுக்கு சிறப்பு சந்தை

    • கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மலர் அங்காடி வளாகத்தில் ஆயுத பூஜையையொட்டி சிறப்பு சந்தை இன்று தொடங்கியது.
    • சிறப்பு சந்தை திறக்கப்பட்டதையொட்டி பொதுமக்கள் வீடுகளுக்கு தேவையான பூஜை பொருட்களை குறைந்த விலையில் வாங்கி சென்றனர்.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, பொங்கல் பண்டிகை உள்ளிட்ட விழா காலங்களில் சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம். பொதுமக்கள் பண்டிகைகளை கொண்டாடுவதற்கான பொருட்கள் மற்றும் பூஜை பொருட்களை ஒரே இடத்தில் வாங்குவதற்காக இந்த சிறப்பு சந்தை நடைபெறும்.

    இந்த சந்தையில் பொதுமக்களுக்கு பொருட்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். கோயம்பேடு மலர் அங்காடி வளாகத்தில் இந்த சிறப்பு சந்தை திறக்கப்படுவது வழக்கம். இந்த சந்தையானது, கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகம் மூலம் ஏலம் விடப்பட்டு, ஒப்பந்ததாரர் மூலம் நடத்தப்படும்.

    தற்போது கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் மூலம் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் இந்த முறை சிறப்பு சந்தை நடத்துவதற்காக ஏலம் விடப்படவில்லை. கோயம்பேடு மார்க்கெட் நிர்வாகமே நேரடியாக சிறப்பு சந்தையை நடத்துகிறது.

    அதன்படி கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள மலர் அங்காடி வளாகத்தில் ஆயுத பூஜையையொட்டி சிறப்பு சந்தை இன்று தொடங்கியது. இதில் முதல் நாளான இன்று பல கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்த சிறப்பு சந்தையில் நவராத்திரி மற்றும் ஆயுத பூஜையை கொண்டாடுவதற்கு தேவையான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

    இந்த சந்தையில் பொரி, கடலை, வாழைப்பழம், வாழைக்கன்று, வாழை இலை, தேங்காய், கரும்பு போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை உள்ளிட்ட பூஜையில் வைப்பதற்கு தேவையான அனைத்து பழங்களும் விற்கப்படுகிறது.

    சாமி படங்களுக்கு அணிவிப்பதற்கான சாமந்தி உள்ளிட்ட அனைத்து வகையான பூக்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

    சிறப்பு சந்தை திறக்கப்பட்டதையொட்டி பொதுமக்கள் இங்கு வந்து வீடுகளுக்கு தேவையான பூஜை பொருட்களை குறைந்த விலையில் வாங்கி சென்றனர். இங்கு பொருட்கள் மொத்த விலையிலும், சில்லரை விலையிலும் விற்பனை செய்யப்பட்டன. இந்த சிறப்பு சந்தை வருகிற 27-ந்தேதி வரை 10 நாட்களுக்கு செயல்படும்.

    Next Story
    ×