search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 40 பேரை ஒரே மேடையில் அறிமுகப்படுத்துகிறார் சீமான்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 40 பேரை ஒரே மேடையில் அறிமுகப்படுத்துகிறார் சீமான்

    • நாம் தமிழர் கட்சி சார்பில் களம் இறங்கும் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • சீமான் தலைமையில் இந்த மாத இறுதியில் பிரமாண்டமான முறையில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலை சந்திக்க சீமானின் நாம் தமிழர் கட்சி தயாராகி வருகிறது.

    தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளில் தனித்தே களம் இறங்கும் நாம் தமிழர் கட்சி 20 தொகுதிகளை பெண்களுக்கு ஒதுக்குவதற்கு முடிவு செய்துள்ளது. வேட்பாளர் தேர்வு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்துக்கும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் திட்டமிட்டுள்ளார்.

    இது தொடர்பாகவும், பாராளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியின் ஆலோசனை மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அண்ணா நகர் மேற்கு விரிவாக்கம் 100 அடி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு சீமான் பேசினார்.

    இதில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், பேச்சாளர்கள் பங்கேற்றனர். பாராளுமன்ற தேர்தலில் எப்படி பணியாற்ற வேண்டும் என்பது பற்றி சீமான் இந்த கூட்டத்தில் விரிவாக விளக்கி பேசினார்.

    இந்த கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    நாம் தமிழர் கட்சி சார்பில் களம் இறங்கும் 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சீமான் தலைமையில் இந்த மாத இறுதியில் பிரமாண்டமான முறையில் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற உள்ளது.

    அந்த மேடையிலேயே சீமான் தனது தேர்தல் பிரசாரத்தையும் தொடங்க உள்ளார். இதைத் தொடர்ந்து அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து சீமான் பிரசாரம் செய்ய உள்ளார். அடுத்த வார இறுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் கூட்டம் நடைபெற்ற மண்டபத்தில் சீமான் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த விவசாயி சின்னத்தை வேறு ஒருவருக்கு வேண்டுமென்றே ஒதுக்கியுள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துடன் பேச்சு நடத்தி வருகிறோம். அதில் உடன்பாடு ஏற்பட்டு விவசாயி சின்னத்தை பெறுவோம் என்கிற நம்பிக்கை உள்ளது. சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், வருகிற 20-ந்தேதி கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளோம். அதில் எங்கள் தரப்பு வாதங்களை எடுத்துக் கூறி நிச்சயம் விவசாயி சின்னத்தை பெறுவோம்.

    எந்த சூழலிலும் கூட்டணி என்பது கிடையாது. தனித்து போட்டியிட்டு 7 சதவீதத்துக்கும் அதிகமாக ஓட்டு வாங்கியுள்ளோம். கூட்டணி அமைத்து போட்டியிட்டால் 0.7 சதவீதம் ஓட்டு கூட கிடைக்காது.

    இவ்வாறு சீமான் கூறினார்.

    Next Story
    ×