search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    என் மகனை சிறைக்கு அனுப்பவும் தயார்- அமைச்சர் ஆவேசம்
    X

    என் மகனை சிறைக்கு அனுப்பவும் தயார்- அமைச்சர் ஆவேசம்

    • ஒரே மதம், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிறீர்கள்.
    • என் மனைவி குழந்தைகளை விட நான் நேசிப்பது என் கட்சியை தான்.

    வேலூர்:

    வேலூரில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் உணர்ச்சி பொங்க அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    நாங்கள் தேர்தல் வாக்குறுதி கொடுத்து மக்களிடையே ஒட்டு கேட்கிறோம். ஆனால் தேர்தல் வாக்குறுதி என்று எதுவும் குறிப்பிடாத பிரதமர் மோடி நான் ஆட்சிக்கு வந்தவுடன் தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளை இருக்கும் இடம் தெரியாமல் அழித்து விடுவேன் என்கிறார்.

    எதற்காக எங்களை அழிக்க வேண்டும். நாங்கள் என்ன தவறு செய்தோம். மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து வருகிறோம். இனியும் செய்யப் போகிறோம்.

    இது போன்ற மக்கள் சேவைக்காக எங்களை அழிக்க போகிறார்களா? வாரிசு அரசியலை ஒழிப்பேன் என்றும் பிரதமர் சொல்கிறார்.

    நாங்கள் கட்சிக்காக பல தியாகங்கள் செய்துள்ளோம். சிறை சென்று இருக்கிறோம். எங்களைப் பார்த்து எங்கள் வாரிசுகளும் அரசியலுக்கு வருவது வாரிசு அரசியலா? பிரதமர் ஒரு சந்தேக வழக்கிலாவது சிறை சென்றுள்ளாரா? முஸ்லிம்களுக்கு எதிராக குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்துள்ளீர்கள். ஒரே மதம், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிறீர்கள்.


    இது சர்வாதிகாரி நாடு அல்ல. சமதர்ம நாடு. இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் இருக்காது. கடந்த முறை நடந்த சோதனையின் போது என் வீட்டில் இருந்தோ எனக்கு சொந்தமான இடங்களில் இருந்தோ ஒரு கோடி ரூபாய் பணத்தை எடுத்தீர்களா? எங்கேயோ எடுத்த பணத்தை வைத்து என் மீது பழி சுமத்தினீர்கள். இதனால் அந்த தேர்தல் நின்றது. மறுபடியும் தேர்தல் நடந்து வெற்றி பெற்றது மட்டுமின்றி சத்தியமும் வென்றது.

    இப்போதும் சொல்கிறேன். இதே போன்ற செயலுக்கான ஆயத்தங்களே நடக்கின்றன. எப்படியாவது கதிர் ஆனந்தை கைது செய்யுங்கள் என்று சில வேட்பாளர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்களாம். என் மகனை சிறைக்கு அனுப்புவதற்கும் தயாராக இருக்கிறேன். இதற்கு எல்லாம் பயப்பட மாட்டேன். என் மனைவி குழந்தைகளை விட நான் நேசிப்பது என் கட்சியை தான்.

    நான் ஒழுக்கமாகவும் நாணயமாகவும் இருந்ததால்தான் ஒரே தொகுதியில் 12 முறை நின்றாலும் எனக்கு மக்கள் ஓட்டு போட்டனர். அது போல தான் என் மகனையும் வளர்த்து உங்களிடம் ஒப்படைத்து இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×