என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆளவந்தார் அறக்கட்டளையின் சொத்துகளை தனியாருக்கு தாரை வார்க்கக்கூடாது- மு.க.ஸ்டாலினுக்கு ராமதாஸ் கடிதம்
- ஆளவந்தாரின் சொத்துகளை தனியாருக்கு தாரை வார்க்க தமிழக அரசு துடிப்பதை வன்னிய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
- ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை திரைப்பட நகரம், சூரிய ஒளி மின்திட்டம், கட்டுமானத் திட்டங்கள் என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்ப்பதை அரசு கைவிட வேண்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-
சென்னையை அடுத்த நெம்மேலி பகுதியில் உள்ள ஆயிரம் காணி ஆளவந்தார் நாயகர் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை, ஆளவந்தார் நாயகரின் நோக்கங்களுக்கு மாற்றாக, தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சிகளை தடுத்து நிறுத்த வேண்டும். ஆளவந்தாரின் வம்சத்தைச் சேர்ந்த வன்னிய குல மக்கள் இன்னும் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மிக மிக பின்தங்கிய நிலையில் தான் உள்ளனர்.
இறை பணிக்கு பயன்படுத்தப்பட்டது போக மீதமுள்ள ஆளவந்தார் நாயகரின் சொத்துகளை வன்னிய மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்காக பயன்படுத்துவது தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். அதை விடுத்து ஆளவந்தாரின் சொத்துகளை தனியாருக்கு தாரை வார்க்க தமிழக அரசு துடிப்பதை வன்னிய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதை எதிர்த்து தமிழகம் இதுவரை காணாத வகையில் போராடுவார்கள். அதற்கு தமிழக அரசு வழிவகுத்து விடக்கூடாது. ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களை திரைப்பட நகரம், சூரிய ஒளி மின்திட்டம், கட்டுமானத் திட்டங்கள் என்ற பெயரில் தனியாருக்கு தாரை வார்ப்பதை தமிழக அரசு கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






