என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வெள்ள நிவாரணம் ரூ.6 ஆயிரம் வழங்ககோரி பொதுமக்கள் போராட்டம்
- சில கிராமங்களில் ரூ.1,000-மும் நிவாரணம் வழங்கப்படுகிறது.
- பொதுமக்கள் ஏராளமானோர் இன்று அங்குள்ள ரேஷன் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திசையன்விளை:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக அளவு பாதிப்படைந்த தாலுகா பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு ரூ.6 ஆயிரமும், மற்ற பகுதிகளுக்கு ரூ.1000 நிவாரண தொகையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி டோக்கன்கள் வழங்கப்பட்டு இன்று முதல் நிவாரண தொகை வழங்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை தாலுகாவில் சில பகுதிகளில் மட்டும் அதிகம் பாதிக்கப்பட்டதாக அறிவித்து ரூ.6 ஆயிரமும், சில கிராமங்களில் ரூ.1,000-மும் நிவாரணம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் தாலுகாவிற்கு உட்பட்ட முதுமொத்தான்மொழி பஞ்சாயத்து மக்கள் இன்று அங்குள்ள ரேஷன் கடை முன்பு தங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை வழங்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் தாலுகாவுக்கு உட்பட்ட சுவிஷேசபுரம் பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பினர். ஆனைக்குடியில் பொதுமக்கள் ரேஷன் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் திசையன்விளை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகாவில் சில கிராமங்களில் பொது மக்களுக்கு ரேஷன் கார்டு அடிப்படையில் தலா ரூ.1000 நிவாரணம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கயத்தாறு தாலுகா ஆத்திகுளத்தை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் இன்று அங்குள்ள ரேஷன் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு கயத்தாறு போலீசார் விரைந்து சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திகுளம் பகுதி மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எங்களின் உடமைகளும் சேதம் அடைந்துள்ளது. எனவே அதிகம் பாதிப்பு ஏற்பட்ட பகுதியாக அறிவித்து எங்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண உதவி வழங்க வேண்டும் என கூறினர்.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தாலுகா அலுவலகத்தில் முறையாக மனு வழங்கும் படியும் பொதுமக்களிடம் போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.






